தமிழகத்தில் 3 நாட்களுக்கு உறை பனி, குளிர் நீடிக்கும்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, மற்றும் குந்தா பகுதியில் நேற்று கடுமையான உறைபனி நிலவியது. வாகனங்களிலும் உறைபனி படர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. தேயிலை தோட்டங்களில் 40 சதவீதம் தேயிலை கருகியுள்ளதாக தெரிகிறது. குறைந்த பட்சம் மைனஸ் 1 டிகிரி அளவுக்கு பனி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காலையில் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் நிலை நீடித்து வருகிறது. இந்த நிலை இன்னும் 3 நாள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

25ம் தேதிக்கு பிறகு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கோட்டுக்கு தெற்குப்பகுதியில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இலங்கையில் தென்கிழக்கில் காற்றுடன் கூடிய தூறல் இருக்கிறது. தமிழகத்தில் நடுக்கும் குளிர் இருக்கிறது. படிப்படியாக இந்த நிலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 24ம் தேதிக்கு பிறகும் குறைந்து 26ம் தேதி குமரிக் கடல் தெற்கு பகுதியில் உள்ள காற்று சுழற்சி கிழக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் சுமத்ரா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக இணையும் வாய்ப்பு உள்ளது. இந்த மாத இறுதியில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் உறைபனி விலகி பனி மட்டும் இருக்கும் அத்துடன் காற்றும் வீசும். பின்னர் மேகமூட்டம் ஏற்பட்டு 27ம் தேதி டெல்டாவில் மழை பெய்யும்.

வட கடலோரப் பகுதியில் லேசான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் தூறல் இருக்கும். பின்னர் மழை பெய்யத் தொடங்கும். இம்மாத இறுதியில் மற்றும் ஜனவரி 5ம் தேதியில் மழை பெய்யும். கடல் வெப்பம் கடல் நீரோட்டம் இலங்கை பகுதி, குமரிக் கடல் பகுதி, கேரள பகுதியில் கடல் வெப்பம் நீடித்துக் கொண்டு இருக்கிறது. ஆப்ரிக்கப்பகுதியில் அரபிக் கடலை ஒட்டி கடல் நீரோட்டம் வலுப்பெற்று வருகிறது. அதனால், அரபு நாடுகளில் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

தற்போது டெல்லியில் உள்ள கடுமையான மாசு கொல்கத்தாவுக்கு இடம் பெயரும். அதனால் டெல்லியிலும் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்த வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஒடிசாவின் தெற்குப் பகுதியிலும் மழை பெய்யும். ஜனவரியிலும் மழை பெய்யும்.

இன்று முதல் 24ம் தேதி வரையில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும். 25ம் தேதியில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இட்ஙகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. 26 மற்றும் 27ம் தேதிகளில் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொருத்தவரையில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் குறைவாக இருக்கும். நீலகிரியில் உறைபனி நீடிக்கும். மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Related Stories: