கோவையில் கை கொடுத்த ‘ஏஐ’: 2 ஆண்டுகளில் தண்டவாளத்தை சேஃபாக கடந்த 6,000 யானைகள்

கோவையில் இருந்து கேரளாவிற்கு போத்தனூர், வாளையார் பகுதிகள் வழியாக இயக்கப்படும் ரயில்கள், மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்கின்றன. ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஏ, பி என 2 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ‘ஏ’ ரயில் பாதை 2.9 கி.மீ. தூரமும், ‘பி’ ரயில் பாதை 4.15 கி.மீ தூரமும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன. இதேபோல கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வாளையார் முதல் கஞ்சிக்கோடு வரையிலான ரயில் பாதைகள் வனப்பகுதி வழியாக செல்கின்றன. இதனால் ரயில் தண்டவாளங்களில் வரும் காட்டு யானைகள், ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வந்தன.

மதுக்கரை முதல் கஞ்சிகோடு வரையிலான பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் 35 காட்டு யானைகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதனை தடுக்க பாலக்காடு ரயில்வே நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிகமாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள ‘பி’ ரயில் பாதையில் வாளையாறு – எட்டிமடை இடையே 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் காட்டு யானைகள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்டறிந்து எச்சரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12 டவர்கள் அமைக்கப்பட்டு, 24 ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 7.05 கி.மீ. தூரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

யானைகள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வரும்போது, கட்டுப்பாட்டு அறை மூலம் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கும், வனத்துறையினருக்கும், லோகோ பைலைட்டிற்கும் தகவல் அனுப்பப்படும். இதனால் லோகோ பைலைட் ரயிலின் வேகத்தை குறைத்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ரயில் தண்டவாள பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் வனப்பணியாளர்கள், காட்டு யானைகள் தென்பட்டால் விரட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுக்கரை ரயில் பாதையில் எந்த ஒரு காட்டு யானை உயிரிழப்பும் ஏற்படவில்லை. 6 ஆயிரம் யானைகள் பாதுகாப்பாக ரயில் பாதையை கடந்து சென்றுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, மதுக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தார்.

மனித-வனவிலங்கு மோதல் தடுக்க ரூ.6 கோடியில் ஏஐ கேமரா
கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் வனத்துறை சார்பில் ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் ரூ.6 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வன விலங்குகளால் அதிகமாக பாதிக்கும் 46 இடங்களை கண்டறிந்து அவற்றில் 34 இடங்களில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள், 12 இடங்களில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வன விலங்கு நடமாட்டம் 24×7 மணியும் கண்காணிக்கப்படும்.காட்டு யானை நடமாட்டம் கண்காணிக்க 2 தெர்மல் டிரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் காட்டிலிருந்து வரும் வனவிலங்குள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடப்படும். மனித-வனவிலங்கு மோதல்களை இத்திட்டத்தின் மூலம் குறைக்க முடியும்’ என்றார்.

Related Stories: