கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான இறுதிகட்ட பர்ச்சேஸ் சென்னையில் கடைவீதிகளில் துணிகள் வாங்க குவிந்த மக்கள்: கேக் ஆர்டர் கொடுக்கவும் மக்கள் அதிக ஆர்வம்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கடை வீதிகளில் துணிகள் வாங்க மக்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. இதே போல கேக் வாங்க ஆர்டர்கள் முன்பதிவில் மக்கள் ஆர்வம் காட்டினர். கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ம் தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் வேறு.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் பஜார் வீதிகளில் படையெடுக்க தொடங்கினர். சென்னையை பொறுத்தவரை நேற்று காலை முதல் கிறிஸ்துமஸ் இறுதி பர்சேஸ் மேற்கொள்ள தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், குரோம்பேட்டை உள்ளிட்ட வர்த்தக பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் பண்டிகைக்கு தேவையான பேன்ட், சர்ட், டீ சர்ட், கோர்ட், சுடிதார், வேஷ்டி, சேலை உள்ளிட்ட துணிகளை ஆர்வமுடன் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

மாலையில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக மாலை நேரத்தில் தி.நகர் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. பொருட்கள் வாங்க பெரும்பாலானவர்கள் மின்சார ரயில்களை நாடியதால் அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தை சமாளிக்கும் வகையில், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பஜார் வீதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கேக் விற்பனை: கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உறவினர்கள், நண்பர்களுக்கு கேக், ஸ்வீட் உள்ளிட்ட பலகாரங்களை வழங்குவது வழக்கம். இதற்காக கிறிஸ்துமஸ் கேக் ஆர்டர் செய்ய பேக்கரிகளில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான நாளை மறுநாள் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். அதே ேபால கிறிஸ்துமஸ் அன்றும் காலையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.

இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். இதற்கான முன்எச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பஸ், ரயில்களில் கூட்டம்: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 24ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து ஜனவரி 4ம் தேதி வரை என 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சென்னைவாசிகள் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடும் வகையில் புறப்பட தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, முன்பதிவு தொடங்கிய அன்றே தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் நிரம்பியுள்ளது. இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும், நாளையும் அனைத்து ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: