ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின் வாக்கு பறிப்பு மோசடியை முறியடிப்போம்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே எச்சரித்தது போல சுமார் ஒரு கோடி வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் கைப்பாவை ஆகிவிட்டத் தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்பதே வாக்குரிமையைப் பறிப்பதற்கான சதிதான் என்று தொடர்ந்து எச்சரித்து வந்தோம்.

அது இப்போது உண்மையாகி உள்ளது. வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வாக்குரிமைப் பறிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை எஸ்.ஐ.ஆர் நடத்தப்படும் 12 மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிகம். இதிலிருந்தே சனாதனவாதிகள் தமிழ்நாட்டைக் குறிவைத்து களம் இறங்கியிருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் நீக்கம் செய்யப்பட்டுள்ள 97.37 லட்சம் வாக்காளர்களில் இதில் இறந்து போனவர்கள், இரு முறை பதிவானவர்கள் என்பதைத் தவிர்த்து 66 லட்சம் பேர் அவரவர் முகவரியில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தகுதியுள்ள வாக்காளர்களேஆவர். அவர்களுடைய வாக்குகளைப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்வது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

எனவே, இடமாற்றம் செய்யப்பட்டு குறிப்பிட்டமுகவரியில் இல்லையென நீக்கம் செய்யப்பட்டுள்ள 66 இலட்சம் வாக்காளர்களையும் மீண்டும் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். இறந்து போனவர்களெனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளவர்களில், பலர் உயிரோடிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

அதுபோலவே ஒரு வாக்குச் சாவடியில் பதிவு செய்திருப்பவர்களைத் தேர்தல் அதிகாரிகள் நீக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. மாஞ்சோலையில் பதிவு செய்திருந்த 1857 வாக்குகள் புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள் என்ற தவறான காரணம் கூறி அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்களாவர்.

தகுதிவாய்ந்த வாக்காளர்களை நீக்குவது, பாஜகவுக்கு சாதகமாகப் போலி வாக்காளர்களை சேர்ப்பது என்ற தந்திரத்தின் மூலம்தான் பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதே தந்திரத்தை தமிழ்நாட்டிலும் கையாள நினைக்கும் பாஜவின் சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் முன்வரவேண்டும்.

Related Stories: