பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசிக்கு முதியோர் – மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசிக்கு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 108 மாணவ, மாணவியர் ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை பாசுரங்களை பாராயணம் செய்தனர். அதனை தொடர்ந்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏகாதசியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

முன்னதாக, பாம்பன் சுவாமிகளால் எழுதியருளப்பட்ட 6,666 பாடல்கள் அடங்கிய தொகுப்பான “ஞான பானு ஒளி” என்ற நூலினை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பாம்பன் சுவாமி திருக்கோயிலில் பணியாற்றி பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரர் ஒருவருக்கும், 5 ஆண்டுகளுக்கு மேல் திருக்கோயிலில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 2 பணியாளர்களை பணிவரன்முறை செய்து அதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

இதன் பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் அனைத்து சிறப்பு கட்டண தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிச.30ம் தேதி நடைபெறும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு ரூ.500 கட்டணத்தில் 1800 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் 1 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணிகளில் 1,500 காவலர்கள் மூன்று ஷிப்ட்டுகளாக பணியமர்த்தம் செய்யப்படுவதோடு, அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்களும், திருக்கோயில் மற்றும் சுற்றுப்புறங்களில் 6 மருத்துவ குழுக்கள் அமைக்கப்படுவதோடு 3 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்படும். அதேபோல், 70 வயதை கடந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கென வைகுண்ட ஏகாதசி நாளான்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவிடும் வகையில் 4 செயல் அலுவலர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் இதே திருத்தப்படாத வாக்காளர் பட்டியலை கொண்டு தான் தேர்தலை சந்தித்து அதிமுக ஆட்சி அமைத்தது. அவர்கள் ஆட்சியில் இருந்த போது இதே வாக்காளர் பட்டியலை வைத்துதானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அவர் கூறுவதுபோல் போலி வாக்காளர்கள் திமுக பக்கம் இருந்திருந்தால் எப்படி ஆட்சிக்கு வந்திருக்க முடியும். இதை ஊடக நண்பர்கள் அவர்களிடமே கேள்வியாக கேளுங்கள். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், தமிழ்நாடு தகவல் ஆணையர் திருமலைமுத்து, ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி அலுவலர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் ரேணுகாதேவி, மோகனசுந்தரம், முல்லை, துணை ஆணையர் நித்யா, பல்கலைக்கழக பேராசிரியை நிரஞ்சனா, உதவி ஆணையர்கள் பாரதிராஜா, சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: