சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் திரண்டு ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த நவம்பர் 4ம் தேதி எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கின. டிசம்பர் 4ம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவடைய இருந்தன. ஆனால், படிவங்கள் பெறுவதற்கான அவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 14ம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில், தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளனர். அதில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள், 2,77,60,332 பெண் வாக்காளர்கள், 7,191 மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் 4,19,355 மாற்றித்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 15.18 சதவீதமாகும்.
சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,25,018 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 பெயர்களும், 3வதாக கோவை மாவட்டத்தில் 6,50,590 பெயர்களும், 4வதாக திருப்பூர் மாவட்டத்தில் 5,63,785 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி பதிவு அலுவலர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம். அதாவது, உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணை உள்ளிடவும். உங்கள் பெயர், வயது மற்றும் தொகுதி போன்ற தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிடலாம். பின்னர் ‘தேடல்’ பொத்தானை அழுத்தி உங்கள் வாக்காளர் விவரங்களை காணலாம். இதில் உங்கள் பெயர் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.
அதேபோல், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு மீண்டும் பெயர் சேர்க்க மற்றொரு வாய்ப்பு அளிக்கும் வகையில் நேற்றைய தினம் மற்றும் இன்றும் சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏராளமானோர் திரண்டனர். இந்த முகாமில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் விண்ணப்பிக்கலாம். அதற்காக படிவம் 6ஐ பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல், வாக்காளர் பட்டியலில் நிரந்தர இடமாற்ற பதிவுகள், இறந்தோர் மற்றும் ஆட்சேபனை தொடர்பான பெயர் நீக்கம் உள்ளிட்டவைகளுக்கு படிவம் 7ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதேபோல், தொகுதிக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள் மற்றும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும், திருத்தம் செய்யவும் படிவ 8ஐ பூர்த்தி செய்து அதற்கான ஆவண ஆதார நகல்களை இணைத்து கொடுக்க வேண்டும். ஜனவரி 18க்கு பிறகு இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும்.
* சென்னையில் 4,079 சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிறப்பு முகாம் இன்றும் நடக்கிறது. சென்னையில் மட்டும் 4079 வாக்குச்சாவடி மையங்களில் முகாம்கள் (காலை 10 மணி – மாலை 6 மணி) நடைபெறுகின்றன. சென்னையை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், voters.cci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
