செய்யூர்: சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஆய்வக கட்டிடத்தால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செய்யூர் வட்டம், சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளில் படிக்கின்றனர். அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுக்கூடம் மிக மிக தேவையான ஒன்று. 25 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டப்பட்டு அதில் மாணவர்கள் சோதனைக்கான ஆய்வுகளை மேற்கொண்டு பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆய்வக கட்டிடம் முழுவதுமாக சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனிடையே, ஆய்வக கட்டிடத்தில் சீரமைப்பு பணிகளை செய்து மாணவர்களின் தேர்வுக்கு உதவிட வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பொதுப்பணித் துறையின் மாவட்ட உதவி செயற்பொறியாளர் மேற்படி பள்ளிக்கு வருகை தந்து ஆய்வக கட்டிடத்தில் ஆய்வை மேற்கொண்டார். அவர், இதில் சீரமைப்பு பணிகளை இனிமேல் மேற்கொள்ள முடியாது. ஏற்கனவே இக்கட்டிடம் முழுமையாக பழுந்தடைந்து விட்டது. தூண்களில் உள்ள கம்பிகள் துருபிடித்துள்ளது. கட்டிடத்தின் மேல் தளமும் பழுதடைந்துள்ளது. சுற்று சுவரும் ஆங்காங்கே சிதிலமடைந்து இருக்கிறது. இதில், சீரமைப்பு பணிகளை மேற்கொண்டால் அது பயனற்றதாகிவிடும். எனவே, புதிய கட்டிடம் தான் கட்ட வேண்டும், என்றார்.
வருகிற மார்ச் மாதம் மாணவர்களின் முழு ஆண்டு பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. உயர் வகுப்புகளில் அறிவியல் பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு ஆய்வு செய்முறை கட்டாயம் இருப்பதால் அவர்களால் ஆய்வை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, மேற்படி பள்ளி மாணவர்களின் நடப்பு கல்வி ஆண்டில் அறிவியல் ஆய்வக தேர்வு பாதிக்காத வகையில் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
