ஓசூரில் வரும் 27ம் தேதி காவேரி கூக்குரல் சார்பில் ‘ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு: மத்திய வேளாண்துறை அமைச்சர் பங்கேற்கிறார்

 

சென்னை: ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ எனும் பிரம்மாண்ட கருத்தரங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதியமான் பொறியியல் கல்லூரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

சத்குரு முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மேலும் பல கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிகளும் இக்கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கருத்தரங்கு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (19/12/2025) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பங்கேற்று பேசினார்.

இதில் தமிழ்மாறன் பேசுகையில், “காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், மரம் சார்ந்த விவசாயத்தை மையமாகக் கொண்ட ஒரு மாபெரும் கருத்தரங்கு டிசம்பர் 27-ஆம் தேதி ஓசூரில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 10,000 விவசாயிகள் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியில், 5 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் மற்றும் 4 மாநிலங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இதுவரை இல்லாத அளவில், விவசாயம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் முக்கியமான கருத்தரங்கமாக இது அமையவுள்ளது.

இன்றைய சூழலில் விவசாய நிலங்களில் குறைந்து வரும் மண் வளம் என்பது சமூகத்திற்கான மிகப்பெரிய சவாலாக உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்புகள் மண் வளம் குறைந்து வருவதால் உணவு உற்பத்தி வெகுவாக குறைந்து எதிர்காலத்தில் மிகப்பெரிய உணவு பஞ்சம் ஏற்படும் என்று எச்சரித்து வருகின்றன.

இதற்கு தீர்வளிக்கும் வகையிலேயே சத்குரு காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கங்களை தொடங்கினார். விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் இரண்டும் ஒரே நேரத்தில் மேம்படும் வகையில் இத்திட்டங்களை அவர் வடிவமைத்தார். இவ்வியக்கங்கள் விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து களத்தில் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.

குறிப்பாக மரம் சார்ந்த விவசாயம், விவசாய நிலங்களில் குறைந்து வரும் மண் வளத்தினை மீட்டெடுக்க மிகச் சிறந்த தீர்வாக இருக்கிறது. மரம் சார்ந்த விவசாயம் என்பது, வழக்கமான பயிர்களுக்கு இடையே, வரப்பு ஓரங்களில் மரங்களை வளர்ப்பதும் அல்லது பிரதானமாக மரங்களை வளர்த்து அதனிடையே ஊடுபயிராக விவசாயம் மேற்கொள்வதாகும். இந்த விவசாய முறை ஒரே நேரத்தில் விவசாயிகளின் பொருளாதாரம், மண் வளம், நிலத்தடி நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துகிறது.

இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில், காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் ஆண்டுதோறும் பல கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் விவசாயிகள் கலந்தாலோசனை கூட்டங்களை நடத்துகிறோம்.

அதன் தொடர்சியாகவே ‘நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் – ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட ஒரு நாள் கருத்தரங்கை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதியமான் பொறியியல் கல்லூரியில் வரும் டிச’27 ஆம் தேதி நடத்துகிறோம். இதில் தமிழ்நாட்டு விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்வில், 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும் வகையில் இருக்கை, உணவு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த கருத்தரங்கில் நாட்டின் முன்னணி வேளாண் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு, உயர்வருமானம் தரும் மரம் சார்ந்த விவசாயம் மற்றும் பயிர் தொழில்நுட்பங்களை பகிர உள்ளனர். இந்திய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முனைவர் ரவி சந்தன சாகுபடியில் நடவு முதல் அறுவடை வரையுள்ள தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சந்தை வாய்ப்புகளை விளக்குகிறார்.

இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் கண்டியண்ணன் மிளகு சாகுபடியில் ரகங்கள், வளர் தொழில்நுட்பம் மற்றும் அதிக விளைச்சல் பெறும் வழிகளை பகிர்கிறார். இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் செந்தில் குமார் மற்றும் சங்கரன் ஆகியோர் அவகேடோ உள்ளிட்ட உலகளாவிய தேவை கொண்ட பழங்கள், சிறு பழங்கள் மற்றும் நீடித்த நிரந்தர வருமான வாய்ப்புகள் குறித்து உரையாற்றுகிறார்கள்.

பூச்சியியல் வல்லுநர் செல்வம் ரசாயனமில்லா பூச்சி மேலாண்மை முறைகளையும், சென்னை ஐஐடி சிவசுப்பிரமணியன் மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பத்தையும் விளக்குகின்றனர். சந்தனம், ஜாதிக்காய் மற்றும் மிளகு விவசாயத்தில் முன்னோடிகளாக விளங்கும் 4 நான்கு மாநில விவசாயிகள் தங்கள் நேரடி அனுபவங்களை பகிர உள்ளனர்.

* விற்பனை கண்காட்சி

விவசாயிகள் தங்களது உற்பத்தியை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யும் வகையில் இயற்கை விவசாய மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது. இதனுடன் மியாசகி மா, அவகோடா, சந்தனம், மிளகு மற்றும் 54 வகையான பழ மரக்கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

* சிறப்பு விருந்தினர்கள்

இக்கருத்தரங்கில் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை மற்றும் கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இயக்குநர் சஞ்சய் கண்ணா மற்றும் டாடா மெடிக்கல் & டயக்னோஸ்டிக்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

* முன்பதிவு அவசியம்

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079, 94425 90081 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதில் தமிழ்நாட்டு விவசாயிகள் திரளாக பங்கேற்று பயன்பெற வேண்டும்” எனக் கூறினார்.

 

 

 

 

Related Stories: