திருப்பரங்குன்றம் சந்தனக்கூடு விழா மலையில் கொடியேற்ற அனுமதி: ஆர்டிஓ தலைமையிலான கூட்டத்தில் முடிவு

 

திருமங்கலம்: திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா மசூதியில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவிற்கு, வழக்கம்போல் மலைமேல் உள்ள மரத்தில் கொடியேற்றலாம் என, திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா மசூதியில், ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும்.

இதையொட்டி மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹாவின் அருகே உள்ள மரத்தில் முஸ்லிம்கள் கொடியேற்றுவது வழக்கம். இந்தாண்டு சந்தனக்கூடு விழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை, திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்டிஓ சிவஜோதி தலைமை வகித்தார். கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா, சுப்பிரமணியசுவாமி கோயில் கண்காணிப்பாளர், திருப்பரங்குன்றம் போலீசார், மண்டல துணை தாசில்தார், சிக்கந்தர் பாதுஷா அவுலியா மசூதியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா மசூதி நிர்வாகம் சார்பில் 2026ம் ஆண்டுக்கான சந்தனகூடு திருவிழாவிற்காக, வரும் 21ம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள மரத்தில் வழக்கம்போல் கொடியேற்றலாம். சந்தனக்கூடு விழா நடத்தும் நிர்வாகிகள், 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகளை நடப்பு ஆண்டிலும் கடைப்பிடிக்க வேண்டும், கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு திருவிழா நாட்களில் வழக்கமான வீதிகளில் ஊர்வலம் செல்லும்போது, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும், கொடியேற்றம், சந்தனக்கூடு நிகழ்வில் புதிய நடைமுறைகளை ஏற்படுத்துவதோ, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பட்டாசு வெடிப்பதோ கூடாது. கொடியேற்றம் நடைபெறும் நாளில் விதிமீறலால் பிரச்னைகளுக்கு தர்கா நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்’ என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: