ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை : அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணி உள்ளிட்டவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக தலைவா் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். கரூர் துயர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கு விசாரணையின் போது, அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள வரைவு வழிகாட்டு விதிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் தொடர்பாக அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் பதில் மனுக்களை தாக்கல் செய்தன. இதைத் தொடர்ந்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளனர்.அதில், வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதிக்கு முன்னதாக இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று மனுதாரர்களிடம் தெரிவித்து, வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories: