கிராமங்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்த 20 ஆண்டு கால 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒரே இரவில் அழித்த மோடி அரசு : ராகுல் காந்தி

டெல்லி : 20 ஆண்டுகால 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒரே நாளில் தகர்த்துள்ளது மோடி அரசு என்று ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “VB-G RAM G திட்டம் என்பது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மறுசீரமைப்பு அல்ல. மாறாக கிராமப்புற வேலைவாய்ப்புகளை அழிக்கும் திட்டம் இது. மாநிலங்களுக்கும், கிராமங்களுக்கும் எதிராக ஒன்றிய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்கியதுடன் நெருக்கடி சூழலில் நடக்கும் இடம் பெயர்வுகளை குறைத்துள்ளது. கிராமப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்தும் 100 நாள் திட்டத்தை சிதைக்கவே ஒன்றிய பாஜக அரசு விரும்புகிறது.

கொரோனா காலகட்டத்தில் பொருளாதாரம் முடங்கி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோது, கோடிக்கணக்கான மக்களை பசியில் இருந்து பாதுகாத்த திட்டம்தான் 100 நாள் திட்டம். இத்திட்டம் ஏழை மக்கள் கடனில் மூழ்கும் ஆபத்திலிருந்து காப்பாற்றியது. இந்த திட்டத்தின் மூலம் பெரிதும் பயனடைந்த பெண்கள், பட்டியலின, பழங்குடியினர், நிலமற்ற தொழிலாளர்கள், ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதையும் அவர்கள் அதிகாரத்தை அடைவதையும் ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு தடுக்கிறது. கிராமப்புற மக்களின் பாதுகாப்பு அரணாக திகழும், மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். மாநிலங்களுடன் ஒன்றிணைந்து நாடு தழுவிய முன்னெடுப்புகள் நிச்சயம் எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: