100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறாகிவிடும் : சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம்

டெல்லி : மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறாக அமைந்துவிடும் என்று சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை நீர்த்து போக செய்யும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்று நோபல் பரிசுபெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உள்பட சர்வதேச பொருளாதார வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், “வேலைவாய்ப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் உலகிலேயே சிறப்பான கொள்கைகளை கொண்ட 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த திட்டம் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பினை பெற்று பொருளாதார அந்தஸ்தை அடிப்படை உரிமையாக்கி உள்ளனர். இந்த திட்டத்தால் பெண்கள், பழங்குடியின மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தால் கிராமப்புற வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. குறைந்த நிதி ஒதுக்கீடு, ஊதியம் வழங்குவதை தாமதப்படுத்துவது திட்டத்தை தீவிரமாக பாதிக்கிறது. பொருளாதார உதவி வழங்காமல் மாநிலங்கள் மேல் சுமை திணிப்பது திட்டத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கிவிடும். ஆகவே மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.கட்டாய வேலை, ஒன்றிய அரசின் நிதிஒதுக்கீடு, குறித்த காலத்தில் ஊதியத்தை உறுதி செய்யும் சரத்துகளை மீண்டும் கொண்டு வர வேண்டும், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: