புதுவை : புதுவை பாரதியார் கிராம வங்கியின் பெயரில் இருந்து பாரதியார் என்ற வார்த்தையை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. புதுவை பாரதியார் கிராம வங்கி புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. தற்போது அதன் பெயர் புதுச்சேரி கிராம வங்கி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன் சின்னமும் மாற்றி அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கிராம வங்கியில் பாரதியார் பெயர் நீக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வங்கி தரப்பில் விசாரித்த போது, ஒன்றிய அரசின் உத்தரவிற்கு இணங்க, புதிய அரசாணை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அந்த அரசாணையின்படியே புதுவை பாரதியார் கிராம வங்கி, புதுச்சேரி கிராம வங்கியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம், மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றுதல் என 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மசோதாவை விரிவாக ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்தின.குறிப்பாக மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
