ஈரோட்டில் நாளை விஜய் பிரசார கூட்டம்; பாஸ், கியூஆர் கோடு கிடையாது; யார் வேண்டுமானாலும் வரலாம்: செங்கோட்டையன் தகவல்

ஈரோடு: பெருந்துறையில் தவெக தலைவர் விஜய் நாளை கலந்துகொள்ளும் பிரசார கூட்டத்திற்கு பாஸ், கியூஆர் கோடு கிடையாது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக பிரசார கூட்டத்திற்கு காவல் துறை என்னென்ன நிபந்தனைகள் விதித்தார்களோ அதை விட கூடுதலாக நிறைவேற்றி வருகிறோம்.

குறிப்பாக பாதுகாப்பு அடிப்படையில் என்னென்ன தேவைகள் குறிப்பிட்டு இருக்கிறார்களோ, அனைத்தும் நிறைவு செய்யப்படும். பாதுகாப்பிற்காக 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். அவசர தேவைக்கு 40 வாக்கி டாக்கிகள் கொடுக்கப்பட இருக்கிறது. 24 ஆம்புலன்சு வாகனங்கள், 72 மருத்துவர்கள், 120 செவிலியர்களுடன் மருத்துவ குழு தயாராக உள்ளது. 20 குடிநீர் டேங்க் வைக்கப்படும். மேலும், அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறது.

60 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை சார்பில் 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். கட்சியினர் 10 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 25 ஆயிரம் பேரும் வருகை தர உள்ளனர். அவர்களுக்கு பாஸ் கிடையாது, கியூஆர் கோடு கிடையாது. கூட்டம் முடிந்ததும் வெளியே செல்ல 14 வழித்தடங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார். கூட்டத்துக்கு யார், யார் வரலாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கியூஆர் கோடு மூலம் போலீசார் அனுமதித்தனர். இதனால், கூட்டம் சேராததால் அனைவரும் உள்ளே வரும்படி புஸ்ஸி ஆனந்த் அழைத்தார். இதன்பிறகே பாஸ் இல்லாமல் ஏராளமானோர் கூட்டத்துக்கு சென்றனர். 41 பேர் பலியான சம்பவத்துக்கு பின், தமிழகத்தில் நடக்கும் முதல் கூட்டத்திற்கு நெரிசலை கட்டுப்படுத்த தவெக சார்பில் ஒரு முறையான ஏற்பாடுகளை செய்யாமல் கூட்டத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது போல் செங்கோட்டையன் பேட்டியளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: