சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2-வது கட்ட விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மகளிருக்கான ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம்’ ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கப்படும்” என தமிழ்நாடு சட்டப்பேரவை பேரவையில் 2023ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் கட்டமாக சுமார் 1,13,75,492 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி கூடுதலாக சுமார் 28 லட்சம் பெண்கள் அரசுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சுமார் 17 லட்சம் பெண்களுக்கு கூடுதலாக மாதம் ரூ.1000 வழங்க வழங்க அரசு முடிவு செய்து, டிச.12ம் தேதி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, கூடுதல் மகளிர் பயனடையும் வகையில், இரண்டாம் கட்டமாக இன்று (12ம் தேதி) முதல் வழங்கப்பட உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2-வது கட்ட விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை
வங்கிக் கணக்குகளில் வரவுவைக்கப்பட்டது.
