*போலீஸ் துணை கமிஷனர் பேச்சு
நெல்லை : மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி உயர் பதவிகளில் வந்து சாதிக்க வேண்டும் என நெல்லை சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த பாரதியார் பிறந்த நாள் பங்கேற்றுப் பேசிய மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசண்ண குமார் கேட்டுக்கொண்டார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் விழா நெல்லை சந்திப்பில் உள்ள மதிதா இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடந்தது.
நிகழ்ச்சியில் அவர் படித்த வகுப்பறையில் உள்ள பாரதி சிலைக்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசண்ண குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி பாரதி படித்த வகுப்பறையில் பாரதி பாடல்களை மாணவிகள் பாடி மரியாதை செலுத்தினர். நிகழ்வுக்கு பள்ளிச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். இதையடுத்து பாரதியார் சிலைக்கு ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு துணை கமிஷனர் பிரசண்ண குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் ‘‘ மாணவர்கள் படிக்கும் காலத்தில் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஜாதி, மதங்களை கடந்து நன்றாக படித்து உயர் பதவிகளில் வந்து சாதிக்க வேண்டும். இதுதான் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும். படிப்பு தான் ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
வரும் காலம் வளமாக அமைய மாணவர்கள் படிப்பில் மட்டுமே தனது முழு கவனத்தை செலுத்த வேண்டும். பாரதி படித்த வகுப்பறை இங்கு உள்ளது. இங்கு படிப்பவர்கள் நல்ல நிலைமைக்கு வருவார்கள்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார்.நிகழ்வில் ஆசிரியர்கள் சொக்கலிங்கம், பாலசுப்பிரமணியன், முத்துராமன் மற்றும் மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
