50 வயது நபருக்கு 6வது டும்…டும்…டும்… 23 வயது பெண்ணை விற்ற புரோக்கர்கள்: பணம் பங்கு போடும்போது தகராறால் குட்டு அம்பலம்

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொடைரோடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணுக்கு, திண்டுக்கல் பொன்நகரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது நிலக்கோட்டை பெண்ணிடம், திண்டுக்கல் பெண், தனக்கு தெரிந்த செல்வந்தர் ஒருவர் திருச்சியில் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொண்டால் வசதியாக வாழலாம். உன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதுதொடர்பாக தந்தை, தங்கையிடம் சொல்ல வேண்டாம். திருமணம் செய்த பிறகு சம்மதம் வாங்கிக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த இளம்பெண், வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்காமல், கடந்த 6ம் தேதி அதிகாலையில், திண்டுக்கல் பெண்ணுடன் திருச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கரூர் மாவட்டம் பேட்டைவாய்த்தலை நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். மற்றொரு அறையில் மணமகன் மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருப்பதாகவும், மறுநாள் காலையில் திருமணம் நடக்க இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதனை நம்பிய அந்த இளம்பெண், மறுநாள் காலை அவர்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பட்டுப் புடவையை கட்டிக்கொண்டு திருமணத்துக்கு தயாராக இருந்தார். அதனைத் தொடர்ந்து அன்று காலை அதே பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபருடன், அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது, மாப்பிள்ளை மற்றும் அங்கு நடக்கும் சம்பவங்கள் மீது இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னை அழைத்து வந்த திண்டுக்கல் பெண்ணிடம் கேட்டபோது, ‘‘திருமணம் முடிந்து விட்டது. இனிமேல் எதுவும் பேசக்கூடாது’’ என கூறி உள்ளார்.

இதனால் இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். அப்போது திண்டுக்கல் பெண் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு இடையே பணம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பெண் தன்னை திருமணம் என்ற போர்வையில் விலைபேசி விற்று, அதன் மூலம் பல லட்சம் ரூபாயை கமிஷனாக வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண் தனது தங்கைக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு, அங்கிருந்து திண்டுக்கல் தப்பி வந்துள்ளார். இதையடுத்து, 50 வயதானவர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள், இளம்பெண் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

புகாரில், எனது ஏழ்மை மற்றும் அறியாமையை பயன்படுத்தி திருச்சியை சேர்ந்த ஒருவருக்கு 6வதாக திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர் என்னைப் போன்ற ஏழ்மையான பெண்களை திருமணம் செய்து வசதி படைத்தவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. அவர் பல்வேறு ஊர்களில் புரோக்கர்களை நியமித்து அவர்களுக்கு கமிஷன் கொடுத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திண்டுக்கல் பெண் உட்பட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் புகார் செய்துள்ளார். திண்டுக்கல் எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: