திருப்பரங்குன்றம் வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க கூடாது: முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் வலியுறுத்தல்

சென்னை: திருப்பரங்குன்றம் வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க கூடாது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களவை சபாநாயகரிடம் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்க வேண்டும் என எம்பிக்கள் மனு கொடுத்துள்ளனர். அதற்கான காரணம், திருப்பரங்குன்றம் தீர்ப்பாகும். இந்த சமயத்தில் தலைமை நீதிபதி அமைதியாக இருக்க கூடாது. தமிழ்நாட்டில் எச்.ராஜா திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற வேண்டும் என்கிறார், அவர் ஒரு அரசியல்வாதி.

ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதி எச்.ராஜா போலவும், ஆளுநர் ஆர்.என்.ரவி போலவும் செயல்படலாமா? ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த வழக்கில் கூடுதலாக அக்கறை செலுத்துகிறார். இதேபோல மற்ற வழக்குகளில் செலுத்த வேண்டியது தானே. அவருடைய மற்ற வழக்குகள் எல்லாம் அப்பீல் போடப்பட்டிருந்தால் தள்ளிப் போடலாம், இந்த வழக்கில் மட்டுமே ஏன் தினமும் கவனம் செலுத்துகிறார். எச்.ராஜா, ஆர்.என்.ரவி வரிசையில் சுவாமிநாதன் நிற்கிறார். தமிழ்நாட்டில் மத நல்லிணக்க அரசியலை கெடுக்க பாஜ இருக்கின்றது. அதற்கு ஜி.ஆர்.சுவாமிநாதன் துணை போகிறார். நீதிபதி திருப்பரங்குன்றம், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய வழக்குகளை ஜி.ஆர். சுவாமிநாதனிடமிருந்து வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும், இந்த வழக்குகளை அவர் விசாரிக்க கூடாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கடந்த 75 ஆண்டுகளாக உயர் சாதிக்காரர்கள், சனாதனிகள் கைகளில் இருக்கின்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: