சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது எஸ்ஐஆர் கணக்கீட்டு காலம் வருகிற 11ம் தேதியுடன் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைதொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16ம் தேதி வெளியிடப்படுகிறது.
இதை தொடர்ந்து 16.12.2025 முதல் 15.1.2026 வரை வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல், எந்த ஒரு தகுதியற்றவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத வகையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் வருகிற 11ம் தேதியுடன் (நாளை மறுதினம்) முடிவடைகிறது. தற்ேபாது பெறப்பட்ட விண்ணப்பங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வருகிற 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழ்நாட்டில் 99.91 சதவீதம் எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்கள் விநியோகிகப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தமுள்ள 6,41,14,587 வாக்காளர்களில் 6,40,59,971 கோடி பேருக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டில் இதுவரை 99.27 சதவீதம் (6 கோடியே 36 லட்சத்து 44 ஆயிரத்து 038) எஸ்ஐஆர் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
