ஜாலவுன்: உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுன் மாவட்டம் குதவுண்ட் காவல் நிலையத்தில் ஆய்வாளராக அருண்குமார் ராய் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 5ம் தேதி இரவு தனது குடியிருப்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அப்போது அங்கிருந்த பெண் காவலர் மீனாட்சி சர்மா, ‘ஆய்வாளர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஆய்வாளரின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, துப்பாக்கிச் சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் மீனாட்சி சர்மா அங்கிருந்து அவசரமாக வெளியேறுவது பதிவாகியிருந்தது.
அதையடுத்து பெண் காவலர் மீனாட்சி சர்மாவிடம் போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். அப்போது, ‘எனது திருமணச் செலவுக்காக 25 லட்சம் ரூபாய் தர வேண்டும், இல்லையென்றால் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோக்களை உனது மனைவியிடம் காட்டிவிடுவேன்’ என்று மீனாட்சி மிரட்டியுள்ளார். இதனால் கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டது. ஆய்வாளரின் சடலம் கொசுவலைக்குள் கிடந்ததும், அறையில் தோட்டா கிடைக்காததும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதையடுத்து தற்கொலை நாடகமாடிய மீனாட்சி சர்மாவை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
