ஜெருசலேம்: இந்தியாவுக்கு 40,000 இலகுரக இயந்திர துப்பாக்கிகளின் முதல் தொகுதி 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான இஸ்ரேல் வெபன் இன்டஸ்ட்ரீஸின் சிஇஓ ஷுகி ஸ்வார்ட்ஸ், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களுக்கு கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளை வழங்க எங்கள் நிறுவனம் 3 ஒப்பந்தங்கள் செய்துள்ளது.
அதன்படி, முதலாவதாக 40 ஆயிரம் இலகு ரக இயந்திர துப்பாக்கிகளுக்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. அரசாங்க சோதனைகள் உட்பட அனைத்து சோதனைகளும் முடிந்து விட்டன. உற்பத்தி உரிமத்தையும் நாங்கள் பெற்றுள்ளோம். வரும் 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் தொகுதியை வழங்க திட்டமிட்டுள்ளோம். 5 ஆண்டுகளுக்குள் 40 ஆயிரம் துப்பாக்கிகளை சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக வழங்க முயற்சி எடுப்போம். இதுதவிர, 1.70 லட்சம் சிக்யூபி கார்பைன் ரக துப்பாக்கிகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ கையெழுத்தாக உள்ளது. மூன்றாவதாக அர்பிள் சிஸ்டம் நவீன துப்பாக்கிகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். இஸ்ரேல் நிறுவனத்துடன் அதானி குழுமத்தின் பிஎல்ஆர் சிஸ்டம்ஸ் நிறுவனம் இணைந்து துப்பாக்கிகளை கூட்டு உற்பத்தி மூலம் தர இருப்பது குறிப்பிடத்தக்கது.
