புயலால் 486 பேர் பலி; 341 பேர் மாயம்; இலங்கைக்கு நடமாடும் இரும்பு பாலம்: கட்டுமான பணியில் இந்திய ராணுவம் தீவிரம்

கொழும்பு: ‘டிட்வா’ புயலால் சின்னாபின்னமாகியுள்ள இலங்கைக்கு இந்தியா நடமாடும் இரும்புப் பாலங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. இலங்கையில் கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் தாக்கி வரும் ‘டிட்வா’ புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட கனமழை காரணமாக இதுவரை 486 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 341 பேரைக் காணவில்லை என்றும், சுமார் 18 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்ட 8 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

சுமார் 1.88 லட்சம் மக்கள் 1,347 அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு உள்கட்டமைப்புகள் சிதைந்ததால், இலங்கைக்குச் சுமார் 700 கோடி டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்டை தேசத்தின் துயர் துடைக்க ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் இந்தியா மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்ட இடங்களை இணைப்பதற்காக, உடனடியாகப் பொருத்தக்கூடிய வகையிலான நவீன இரும்புப் பாலங்களை இந்தியா நேற்று அனுப்பி வைத்தது.

இந்திய ராணுவத்தின் சத்ருஜீத் படைப்பிரிவு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் களத்தில் இறங்கிச் சேவையாற்றி வருகின்றனர். முன்னதாக விமானப்படை விமானம் மூலம் நடமாடும் மருத்துவமனை மற்றும் 70 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் அங்கு விரைந்தனர். மேலும், ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் உதய்ஜிரி கப்பல்கள் மூலம் 90 டன் எடையுள்ள உணவுப் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மிக மோசமானப் பேரழிவைச் சந்தித்துள்ள வேளையில் இந்தியா அளித்து வரும் ஆதரவிற்கு இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: