இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக அசிம் முனீர் நியமிக்கப்பட்டு, அவரிடம் முழு அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட 27வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், முப்படைகளின் ஒருங்கிணைப்புத் தலைவராக இருந்த பதவி ரத்து செய்யப்பட்டு, ‘பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி’ (சிடிஎஃப்) என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அளித்த பரிந்துரையை ஏற்று, ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீரை இந்தப் புதிய பதவியில் நியமித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவ வரலாற்றிலேயே அதிக அதிகாரம் கொண்ட தனிநபராக அசிம் முனீர் உருவெடுத்துள்ளார். இவர் ஏற்கனவே ராணுவத் தளபதியாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் பொறுப்பேற்றுள்ளதால், ராணுவக் கட்டுப்பாடுகள் மற்றும் முக்கிய உத்திசார் முடிவுகள் எடுக்கும் அதிகாரம் அனைத்தும் இனிமேல் அவர் வசமே இருக்கும்.
அசிம் முனீர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார் என்றும், அதேசமயம் ராணுவத் தளபதி பொறுப்பையும் அவரே கூடுதலாகக் கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விமானப்படைத் தளபதி ஜாகிர் அகமது பாபர் சித்துவின் பதவிக்காலம் 2026 மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அதன்பிறகு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பணியில் நீடிக்கவும் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய நியமனங்கள் மற்றும் பதவி நீட்டிப்புகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரக் கட்டமைப்பு ஒரே புள்ளியில் குவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
