சென்னை: எண்ணற்ற சட்டக்குறுக்கீடுகள், நிர்வாகக் குறுக்கீடுகள் வழியாகவும், பாஜ அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து தொல்லை தரும் வகையில் பல தடைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி, பல முற்போக்கான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறோம்.
இதற்கு அடித்தளம் அமைத்தது, திராவிட இயக்கம். தமிழ்நாட்டின் அரசியல் என்பதே, சமூகநீதி அரசியலாகதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியுடன் பயன்கள், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைந்திருக்கிறது. ஐ.நா. மன்றத்தின் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளான தனிநபர் வருமானம், கல்வி, பொது சுகாதாரம், பெண்ணுரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற குறியீடுகளில் இந்திய மாநிலங்களுடன் ஒப்பிட்டால், தமிழ்நாடு பல துறைகளில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.கடந்த நான்கரை ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளையும் மீறி, போராடி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம்.
* 1967-ல் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றதும் தன்னுடைய சட்டமன்ற உரையில், “மாநிலங்கள் உரிமை பெற அரசமைப்புச் சட்டத்தில் மறு ஆய்வு தேவையானது” என்று குறிப்பிட்டார்.
* 1969ம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.
* ஒன்றிய – மாநில உறவுகளைச் சீராய்வு செய்து 1971, மே 27-ல் ராஜமன்னார் குழு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அளித்தது.
* அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, 1974 ஏப்ரல் 14ம் நாள் மாநில சுயாட்சி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முதலமைச்சராக இருந்த கலைஞர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு ஒரு மடல் எழுதி, மாநில சுயாட்சி தீர்மானத்தையும் இணைத்து, ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
* இன்றைக்கும் ராஜமன்னார் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பரிந்துரைகள் மிகவும் போற்றத்தக்கதாகவும், நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையிலும் இருக்கிறது.
* தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜ அல்லாத கட்சிகளின் தலைமையில், ஆட்சி நடைபெறுகிறது. இந்த பட்டியலில் காஷ்மீரும் ஒரு மாநிலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி, தன்னிச்சையாக, காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, ஆளுநர் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் மாநிலத்தை ஒன்றிய அரசின் நேரடியான ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக மாற்றி அறிவித்தார்.
இத்தகைய ஜனநாயக விரோத, கூட்டாட்சியியலுக்கு எதிரான நடவடிக்கைளை திராவிட முன்னேற்றக் கழகமும், எங்களோடு இணைந்திருக்கின்ற காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முசுலீம் லீக் என்று அனைத்து கட்சிகளும் இணைந்து கண்டித்தோம்.
இது போன்ற நிலை தொடரக்கூடாது; மாநிலங்களுடைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படக்கூடாது என்ற உணர்வில்தான், மீண்டும், கடந்த 50 ஆண்டுகளில் கூட்டாட்சிக்கு எதிராக நடைபெற்ற நிகழ்வுகளை ஆய்ந்து, உரிய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவை நியமித்திருக்கிறோம்.
கடந்த 1983ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டை தொடர்ந்து, அன்றைய ஒன்றிய அரசு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் சர்க்காரியா தலைமையில் 1983-ல் ஒரு குழு அமைத்தது. நீதியரசர் சர்க்காரியா குழு, 1988-ல் தன்னுடைய அறிக்கையை வெளியிட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கையில் ஒரே ஒரு இடத்தில் மாநிலங்களுக்கு ஆதரவாக என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், ‘‘இந்தியாவில் பொதுவாக பெருமளவில் அதிகாரக் குவிப்பு நடைபெற்று வருகிறது.
இதைத் தடுப்பதற்குப் பயனுள்ள வகையிலும், மனசாட்சியுடனும் எல்லா நேரங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய அதிகாரக் குவியல்களால் ஒன்றிய அரசுக்கு ரத்தக் கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்தச் சோகையும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு என்னவெனில், நோயுற்ற தன்மையும், திறமையின்மையும்தான் இதன் வெளிப்பாடாக உள்ளது. உண்மையில் அதிகாரக்குவியல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதிகப்படுத்துகிறது’’ என்று அந்த அறிக்கையில் இருக்கிறது.
சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்ட இந்தக் கருத்துக்கு ஏற்ப மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், இந்த ஆணையம் அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு உரிய பரிந்துரைகளை செய்யவில்லை. ஒன்றிய அரசிடம் பல அதிகாரங்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மாநிலங்களின் உரிமைகளை நிலைநிறுத்த ஆய்வுக் குழு அமைக்கவேண்டும் என்று திமுக வலியுறுத்தியதை தொடர்ந்து 2007ம் ஆண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி புஞ்சி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் பரிந்துரைகளில் மிக முக்கியமானது ஆளுநரை எப்படி நியமனம் செய்யவேண்டும் என்பதுதான். கட்சி சார்பற்ற முறையில், நடுநிலையாக செயல்படக்கூடிய சிறந்தவர்களாக தேர்ந்தெடுத்து அந்தந்த மாநில முதலமைச்சர்களிடம் கலந்தாலோசித்து ஒன்றிய அரசு நியமனம் செய்யவேண்டும் என்று புஞ்சி ஆணையம் தனது பரிந்துரையை வழங்கியது. இந்த ஒரு ஆலோசனையைக் கூட ஒன்றிய அரசு இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டில் தற்போதைய ஆளுநரின் செயல்பாடுகளை வைத்தே நாம் தெரிந்து கொள்ள முடியும்.
இதுபோன்ற எண்ணற்ற சட்டக்குறுக்கீடுகள், நிர்வாகக் குறுக்கீடுகள் வழியாகவும், பாஜ அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து தொல்லை தரும் வகையில் பல தடைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது. மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய, நியாயமான நிதி பங்கீட்டை மறுக்கின்றது. இதையெல்லாம் மீறி, கடந்த 4 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு, பல சிறந்த திட்டங்களை வகுத்து, நிறைவேற்றி வருகிறது. இந்தி மொழியை திணிப்பதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஆனாலும், பல்வேறு மொழிப் போராட்டக் களங்களை எதிர்கொண்டு, இந்தித் திணிப்பை தமிழ்நாடு முறியடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து எழுப்பப்படுகின்ற இந்தி ஆதிக்க எதிர்ப்பு, மாநில உரிமை முழக்கத்தை இப்போது இந்தியாவின் பல மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக திராவிட இயக்க சிந்தனையாளர்களான முரசொலி மாறன், கு.ச.ஆனந்தன், ஆலடி அருணா ஆகியோர் சிறந்த ஆய்வு நூல்களை எழுதியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு அமைத்த குழு போல இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களும் இதுபோல குழு அமைத்து, மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழு தலைவருமான நீதியரசர் குரியன் ஜோசப்,
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர், முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, கேரள மாநில முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக், தலைமைச்செயலர் முருகானந்தம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் உள்ளிட்ட அரசு செயலர்கள், ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழு உறுப்பினர்கள் அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர்கள், சட்டத்துறை வல்லுநர்கள், கல்லூரி மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
* ‘உரிய நிதிப் பங்கை வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படுகிறது’
ஒன்றிய அரசு விதிக்கின்ற நேர்முக வரிகளிலும், ஜி.எஸ்.டி. வரிகளிலும் ஒன்றிய அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்ற மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தருகின்ற நிதிப் பகிர்வுத் தொகையில், மாநிலம் அளிக்கின்ற வரி வருமானத்துக்கு ஏற்ப, ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசுக்கு உரிய நிதிப் பங்கை வழங்காமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
