பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு

 

கூடுவாஞ்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை கையாளும் வகையில் கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள கிளாம்பாக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது 110 விதியின் கீழ் சட்ட சபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 ஏக்கர் நிலப்பரப்பில் பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்டார்.

தனையடுத்து 2019ம் ஆண்டு 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளும், இதேபோல் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை 6 நாட்களுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,415 சிறப்பு பேருந்துகளையும் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்கூட்டியே குடும்பம் குடும்பமாக படையெடுத்து வரும் மக்கள் கூட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதி வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் பேருந்து நிலையத்தை ஒட்டியபடி 110 ஏக்கரில் ஏற்கனவே 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. மீதமுள்ள தனியாருக்குச் சொந்தமான காலி நிலத்தில் இருந்த குன்றினை ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி தற்போது அந்த இடத்தில் சிஎம்டிஏ நிர்வாகம் சார்பில் தற்காலிக பேருந்து நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

கலைஞர் நூற்றாண்டு தற்காலிக பேருந்து முனையம் எனும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு நடந்து வரும் பணிகளை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் கூடுதலாக வரும் பேருந்துகளை அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் அந்த பேருந்துகளை அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு எடுத்துச் சென்று தென் மாவட்டங்களுக்கு இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: