×

பொறுப்பற்ற முறையில் செயல்படுவதா..? அல்லு அர்ஜூன் மீது தயாரிப்பாளர் கடும் தாக்கு

ஐதராபாத்: அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பிரீமியர் காட்சியின் போது திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ரசிகை ஒருவர் அகால மரணம் அடைந்தார். இதையடுத்து அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ‘இனி தெலங்கானாவில் சிறப்புக்காட்சிகள் ரத்து’ என்று அறிவித்து, அல்லு அர்ஜூன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இது திரையுல வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர் தம்மரெட்டி பரத்வாஜ் என்பவர் அளித்த பேட்டியில்,
தெலுங்கு படவுலகில் நடந்து வரும் சில சம்பவங்கள் கொடூரமானவை. தெரியாமல் தவறுகள் நடந்தாலும், அதை மறைக்க தெரிந்தே பொய் சொல்வதை ஏற்க முடியாது. ஒவ் வொரு முறையும் தொழில் துறையினர் முதல்வரை அணுகி, கையைக்கட்டி நிற்க வேண்டுமா? இதுபோன்ற சூழ்நிலை ஏன் தொடர்ந்து நடக்கிறது என்பதை சமீபத்திய சம்பவங்களைப் பார்த்தால் நன்கு புரியும். திரைப்பட நட்சத்திரங்களை ரசிகர்கள் கடவுள் போல் பார்க்கின்றனர். ஹீரோக்கள் தாங்கள் செல்லும் இடமெல்லாம் கான்வாய்களில் பயணிக்க வேண்டும், ரோட் ஷோ நடத்த வேண்டும் என்பதாக நடந்துகொள்கின்றனர்.

இது ஒரு டிரெண்டாகி வருகிறது. அவர்கள் அமைதியாக படம் பார்த்துவிட்டு, சலசலப்பு இல்லாமல் திரும்பினால், இதுபோன்ற சம்பவங்கள் நடக் காது. சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்ற மூத்த நடிகர்கள் ஒருபோதும் பொறுப்பற்ற முறையில் செயல்படவில்லை. அவர்கள் ரசிகர்களிடம் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டனர். அவர்கள் மல்டி பிளெக்ஸ் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துவிட்டு, அந்த இடத்தில் இருக்கும் ரசிகர்களுடன் சிறிது நேரம் உரையாடிய பிறகு திரும்புவார்கள். ஒற்றை திரையரங்குக்குச் செல்ல நேர்ந்தால், அதை அறிவிக்காமல் அமைதியாகச் சென்று வருவார்கள்.

இப்போது ​​ஒரு ஹீரோ எப்போது, எங்கே இருப்பார் என்பதை அவர் புறப்படுவதற்கு முன்பே சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர். இது அதிக மக்கள் கூட வழிவகுக்கிறது. இதனால், குழப்பமான சூழ்நிலை ஏற்படுகிறது. திரை பிரபலங்களும் சாதாரண மனிதர்கள்தான் என்பதை நினைவில் கொண்டால், அவர்களின் செயல்கள் இவ்வளவு குழப்பங்களை ஏற்படுத்தாது’ என்றார்.

Tags : Allu Arjun ,Hyderabad ,
× RELATED நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் போலீசார் நோட்டீஸ்