சென்னை: சூர்யா நடித்த ‘காக்க காக்க’, ‘கஜினி’, எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நியூ’ போன்ற படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை, தவிர்க்க முடியாத சில காரணங்களால் அஜித் குமார் தவறவிட்டார். அந்த வரிசையில், பாலா இயக்கத்தில் ‘நான் கடவுள்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் அஜித் குமார் நிராகரித்தார். அப்போது பாலாவுக்கும், அஜித் குமாருக்கும் இடையே நடந்த கசப்பான சம்பவங்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில். அஜித் குமாரை ‘நான் கடவுள்’ படத்தில் நடிக்க வைக்க நினைத்தது ஏன் என்பது குறித்து பாலா முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். விக்ரம் நடித்த ‘சேது’ என்ற படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் ‘நந்தா’ என்ற படத்தை பாலா இயக்கினார். இதில் சூர்யாவுக்கு முன்பு அஜித் குமார் நடிப்பதாக இருந்தது.
பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. பிற்காலத்தில் பாலா, அஜித் குமார் இணைந்து பணியாற்ற விரும்பினர். அதன் காரணமாக ‘நான் கடவுள்’ படத்தில் பாலா, அஜித் குமார் கூட்டணி அமைத்தனர். அஜித் குமாருக்கு ‘நான் கடவுள்’ கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அப்படத்தில் இருந்து அஜித் குமார் விலகி விட்டார். பிறகு அந்தப் படத்தில் ஆர்யா நடித்தார். அஜித் குமார் போன்ற ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் ஹீரோவை ‘நான் கடவுள்’ படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த பாலா, ‘நாங்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதற்காகத்தான் ‘நான் கடவுள்’ படத்தை அஜித் குமாரை வைத்து இயக்க நினைத்தேன். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது’ என்றார். பாலா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.