‘சார்பட்டா 2’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு ஆர்யா பதிலளித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் ஆர்யா. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ‘சார்பட்டா பரம்பரை 2 எப்போது?’ என்ற கேள்விக்கு “ஏப்ரலில் தொடங்குகிறோம்” என்று தெரிவித்தார். இரண்டாம் பாகம் சீசன் குறித்த கேள்விக்கு ஆர்யா, “அதை திணிக்கக் கூடாது. பாகம் 1 வரவேற்பைப் பெற்றுவிட்டால், இரண்டாம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பெரிய வசூல் இருக்கும்.
அதெல்லாம் தாண்டி படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும்” என்று பதிலளித்துள்ளார். மேலும் விமர்சன சர்ச்சைகள் குறித்து, “விமர்சனங்கள் பண்ணுங்க, பண்ணாதீங்க என்று சொல்ல முடியாது. விமர்சனங்களைத் தாண்டி படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்” என்று தெரிவித்துள்ளார் ஆர்யா. அவருடைய நடிப்பில் அடுத்ததாக மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் வெளியாகவுள்ளது. இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.