×

வியாசர்பாடியில் உள்ள வைத்திய சாலையில் மூட்டு வலி சிகிச்சைக்கு வந்த மூதாட்டியிடம் நகை அபேஸ்: வேலைக்கு சேர்ந்த முதல் நாளே கைவரிசை காட்டிய இளம்பெண்

பெரம்பூர்: வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில், லட்சுமி நாராயணன் என்பவர், ஆரிய வைத்திய சாலா என்ற சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், இந்த வைத்திய சாலாவிற்கு பிரியா என்பவர் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், மதியம் 1 மணிக்கு, வைத்திய சாலாவை பூட்டிவிட்டு அனைவரும் சாப்பிட சென்றனர். புதிதாக வேலைக்கு சேர்ந்த பிரியாவையும் சாப்பிட அனுப்பி வைத்துவிட்டு, மாலை 5 மணிக்கு வரும்படி கூறியுள்ளனர்.

வைத்திய சாலாவின் ஒரு சாவியை, பிரியாவிடமும் ஒப்படைத்துள்ளனர். இந்த வைத்திய சாலாவில், வியாசர்பாடி சாமியார் தோட்டம் முதல் தெருவை சேர்ந்த மகாலட்சுமி (65) என்பவர், மூட்டு வலி சிகிச்சைக்காக, நேற்று முன்தினம் மாலை அப்பாயின்மென்ட் வாங்கி இருந்தார். இதையறிந்த பிரியா, சாப்பிட வீட்டிற்கு செல்லாமல், மீண்டும் வைத்திய சாலாவுக்கு திரும்பி வந்துள்ளார். பின்னர், மூதாட்டி மகாலட்சுமியை செல்போனில் தொடர்புகொண்டு, மதியம் 2 மணிக்கு வந்தால் சிகிச்சை பெறலாம், என அழைத்துள்ளார். அதன்படி, மகாலட்சுமி வந்துள்ளார்.

அப்போது, அவர் கழுத்தில் கிடந்த 2 சவரன் செயின் மற்றும் கால் சவரன் மோதிரம், செல்போன் அனைத்தையும் தனியாக வைக்கும்படி பிரியா கூறியுள்ளார். மகாலட்சுமியும் அவ்வாறு செய்துள்ளார். சிறிது நேரத்தில் மகாலட்சுமி கண்களில் மருந்து விட்டு, கண்களை மூடி இருக்கும்படி கூறியுள்ளார். 15 நிமிடங்கள் கழித்து மகாலட்சுமி கண்ணை திறந்து பார்த்தபோது, பிரியாவை காணவில்லை. மேலும், நகை, செல்போனும் மாயமானது தெரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி, இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

The post வியாசர்பாடியில் உள்ள வைத்திய சாலையில் மூட்டு வலி சிகிச்சைக்கு வந்த மூதாட்டியிடம் நகை அபேஸ்: வேலைக்கு சேர்ந்த முதல் நாளே கைவரிசை காட்டிய இளம்பெண் appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi ,Perambur ,Lakshmi Narayanan ,Arya Vaidya ,Sala ,Vyasarpadi-Erukkanchery Highway ,Priya ,
× RELATED வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய...