சென்னை: அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கை: இனி புகாரளித்தால் நம்மை வைத்து அரசியல் செய்துவிடுவார்கள் என்ற பயத்தை பெண்களிடம் உருவாக்கவே பழனிசாமி திட்டமிடுகிறார் எனத் தோன்றுகிறது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வெளிப்படையான நேர்மையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
ஆனால் ஊடகத்தில் வந்த செய்தி ஊடகத்தில் வந்த செய்தி என சொல்லி வதந்திகளை மட்டும் தானே பழனிசாமி பரப்பி வந்துள்ளார்? தற்போது எப்ஐஆர் கசிந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று ஒன்றிய அரசின் தேசிய தகவலியல் மையமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. அற்பத்தனமாக பொய் பேசிய பழனிசாமி, நியாயமாக மக்கள் முன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் ஆனால் கேட்டாரா இல்லை அடுத்த பொய்க்கு தாவிவிட்டார்.
குற்றவாளி ஞானசேகரன், ‘சார்’ என்று போனில் யாரிடம் பேசினான் என்று கேட்கிறார். அவன் அந்த மாணவியை மிரட்டுவதற்காகவே அப்படி போனில் பேசுவதாக நடித்திருக்கிறான் என காவல்துறை ஆணையர் விளக்கியிருக்கிறார். விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது. பழனிசாமி ஏதையோ மறைப்பதாக உளறி வருகிறார். இந்த வதந்தி அரசியல் எல்லாம் ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது.
2014 முதல் 2019 வரையில் தான் ஞானசேகரன் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான் அப்போது யார் ஆட்சி செய்தது என்பதை பழனிசாமி மறந்து விட்டாரா? மாணவிகளிடமும் பெற்றோரிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் அதிமுக பாஜக கள்ளக்கூட்டணியின் உள்நோக்கம் என்னவென்று மக்கள் புரிந்து கொள்வார்கள். பொள்ளாச்சி வழக்கினை சிபிஐ- க்கு உடனடியாக மாற்றினேன் என பெருமையாகக் கூறுகிறார்.
அதிமுகவின் முக்கிய புள்ளிகள் மறைமுகமகாவும், அதிமுகவின் பொள்ளாச்சி நகர இளைஞரணி செயலாளர் அருளானந்தம் முக்கியக் குற்றவாளியாக இருந்ததாலும், எடப்பாடி பழனிசாமி மீது துளியும் நம்பிக்கை இன்றி பொதுமக்கள், மாணவர்கள், எதிர்கட்சிகள் நடத்திய கடும் போராட்டத்தால் சிபிஐயிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் ஒன்றிய பாஜகபொள்ளாச்சி முதல் அண்மையில் ராமேசுவரத்தில் குளியலறையில் கேமரா வைத்து கைதானவர்கள் வரை பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாக அதிமுகவே இருந்து வருகிறது என்பது கண்கூடு. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள் என்பார்கள் ஆனால் பழனிசாமியின் புளுகு ஒரு நாள் கூட நீடிப்பதில்லை.
2022ம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில், ஒருதலை காதலை ஏற்க மறுத்த சத்தியப்பிரியா என்ற கல்லூரி மாணவியை மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளி சதீஸ்க்கு இரண்டே வருடத்தில் முழு விசாரணையும் முடிந்து மரண தண்டனை கிடைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாடு காவல்துறை மற்றும் நீதித்துறை. சத்தியபிரியா கொலை வழக்கில் குற்றவாளிக்கு எப்படி விரைவாக அதிகப்பட்ச தண்டனையை இந்த அரசு பெற்றுத் தந்ததோ அதே போல இந்த வழக்கில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து விரைவான நீதியை இந்த அரசு பெற்று தரும்.
The post அரசியல் இருப்பை காட்ட தமிழக மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுவதா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் appeared first on Dinakaran.