*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
மூணாறு : மூணாறில் உள்ள முதிரப்புழை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களுள் ஒன்றான மூணாறில், தற்போது குளிர் சீசன் துவங்கியுள்ளது. இதனால் மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மூணாறின் இதயம் என்று சொல்லக்கூடிய முதிரப்புழை ஆற்றில் தற்போது இறைச்சி, காய்கறி, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால் ஆறு மாசடைந்து வருகிறது.
ஊராட்சி சார்பில் நகரின் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க பசுமைப்படையின் சேவையை முடுக்கிவிட்டாலும், முத்திரபுழாவில் குப்பை கொட்டுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், மூணாறுக்கு வருகை தந்த இடுக்கி மாவட்ட கலெக்டர் வி.விக்னேஸ்வரி, முதிரப்புழை ஆற்றில் கழிவுகள் கொட்டுபவர்களை கண்டு பிடித்து ரூ.25,000 அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
மேலும் ஆற்றில் கழிவுகள் கொட்டாமல் இருக்கவும், கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை பலப்படுத்தவும், ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் உத்தரவிட்டு சென்று சில நாட்களே ஆனநிலையில் நகரில் உள்ள பெரியவாரை ஜங்ஷன் முதல் ஆற்றின் பல பகுதிகளில் சாக்கு மூட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் கட்டி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், தண்ணீரில் குப்பைகள், இறைச்சிக்கழிவுகள் தேங்கி அழுகி துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் நகரில் செயல்பட்டு வரும் ஹோட்டல்கள், டீ கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகள் ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
எனவே ஆற்றில் கழிவு நீர் கலக்கச் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், ஆற்றை சுத்தம் செய்யவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதால் முதிரப்புழை ஆறு மாசடையும் அவலம் appeared first on Dinakaran.