×

நெருங்கும் பொங்கல் பண்டிகை: நெல்லையில் மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயார்


நெல்லை: பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராக உள்ளன. சில இடங்களில் மஞ்சள் குலை அறுவடையும் நடந்து வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் இப்போதே வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடிக்கும் பணிகளை தொடங்கி விட்டனர். பொங்கல் பண்டிகை தினத்தன்று சூரிய பகவானுக்கு காய்கறிகள், கரும்பு ஆகியவற்றோடு மஞ்சள் குலைகளும் படைக்கப்படும். அன்றைய தினம் பெண்கள் மஞ்சள் குலையை பானையில் கட்டி பொங்கலிடுவர். தைப்பொங்கல் விழா நெருங்கும் போது புதுமணத் தம்பதிகளுக்கு மணப்பெண் வீட்டினர் அளிக்கும் பொங்கல் சீர்வரிசையிலும் மஞ்சள் குலைகள் கட்டாயம் இடம் பெறுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னமும் 17 தினங்களே உள்ள நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மஞ்சள் குலைகளை பயிரிட்ட விவசாயிகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, முக்கூடல், அம்பாசமுத்திரம், கோபாலசமுத்திரம், டவுன் பாறையடி, சேந்திமங்கலம், அருகன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் குலைகள் அதிகம் பயிரிடுவது வழக்கம். கடந்த ஆனி மாதத்தில் மஞ்சள் விதை கிழங்குகளை விதைத்த விவசாயிகளுக்கு 7 மாதங்களுக்கு பின்னர் இப்போது அறுவடை பக்குவம் காணப்படுகிறது. மஞ்சள் குலைகள் மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்தில் கூடுதல் விற்பனையாகும் என்பதால் விவசாயிகள், தற்போது வயல்களில் அறுவடைக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை சுற்றுவட்டாரங்களில் உள்ள தோட்டங்களில் மஞ்சள் குலைகள் சாகுபடி நிறைவு பெற்ற நிலையில் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

மொத்த வியாபாரிகள் தோட்டங்களுக்குச் சென்று மஞ்சள் குலைகளை கொள்முதல் செய்து வருகின்றனர். பொங்கலுக்கு சில நாட்கள் முன்பு மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நெல்ைல டவுனைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகையை கவனத்தில் கொண்ேட ஆண்டுதோறும் ஆனி மாதம் மஞ்சள் சாகுபடியை நடத்தி வருகிறோம். மற்ற பயிர்களை விட மஞ்சள் சாகுபடியில் பாத்தி அமைப்புகள் மற்றும் களையெடுக்கும் பணிகள் குறைவு. மஞ்சள் சாகுபடிக்கு ஊடுபயிராக கீரைகள், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளையும் பயிரிட்டுக் கொள்ளலாம். வரும் ஜனவரி முதல் வாரத்தில் மஞ்சள் குலைகளை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

எங்களிடம் இருந்து ஒரு குலையை ரூ.25 முதல் ரூ.30 என வாங்கிச் செல்லும் வியாபாரிகள், மார்க்கெட்டில் ரூ.50 வரை விற்பனை செய்வது வழக்கம். இவ்வாண்டு மஞ்சள் குலைகளுடன் தோட்டங்களில் பயிரிடப்பட்ட சிறுகிழங்கு, சேம்பு, சேனைக் கிழங்குப் பயிர்கள் தொடர் மழையில் சேதமடைந்துள்ளன, கிழங்கு சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மஞ்ள் குலைகள் ஓரளவுக்கு தப்பிவிட்டன.’’ என்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள மஞ்சள் குலைகளை வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் வியாபாரிகள் இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

The post நெருங்கும் பொங்கல் பண்டிகை: நெல்லையில் மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயார் appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Nellai ,Nellai district ,Pongal ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்...