×

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ₹750 பணம் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: பொங்கல் தொகுப்பு பொருட்களுக்கு பதிலாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ₹750 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய ஆளுநர் கிரண்பேடிக்கும், ஆளும் அரசுக்கும் இந்த விவாகரத்தில் மோதல் ஏற்பட்டது. பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணமாக செலுத்ததும்படி கிரண்பேடி உத்தரவிட்டார்.

தொடர்ந்து 2021ம் ஆண்டு என்.ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றவுடன் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப் பருப்பு, கடலை பருப்பு உட்பட 10 பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் 2023ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் பொதுப்பணித்துறையில் தேர்வு செய்யப்பட்ட இளநிலை பொறியாளர்கள், ஓவர்சீர்களுக்கு நேற்று மாலை பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகைக்கு பொருட்களுக்கு பதிலாக கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைபோல, இந்தாண்டும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ₹750 வங்கி கணக்கில் செலுத்தப்படும்’ என்றார்.

The post புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ₹750 பணம் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangaswamy ,Puducherry government ,Congress ,Dinakaran ,
× RELATED பெண்கள் பாதுகாப்பில் பாஜக நாடகம்:...