×

பறக்கும்படை ₹11 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; வேலூர் எம்பி கதிர்ஆனந்த் வீடு உட்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: வழக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல்

சென்னை: 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பறக்கும்படை சோதனையில் ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக, வேலூர் எம்பி கதிர் ஆனந்த் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பறக்கும்படைக்கு வந்த ரகசிய தகவலின் படி, வேலூர் தொகுதி வேட்பாளராக நின்ற கதிர்ஆனந்த் வீடு மற்றும் உறவினரான பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கதிர் ஆனந்த வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் வீடு, சிமென்ட் குடோனில் இருந்து மூட்டை மூட்டையாக ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளும் கதிர்ஆனந்த் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து கணக்கில் வரா ரூ.11.48 கோடி ரொக்கம் தொடர்பாக எந்த ஆவணங்களும் சிக்கவில்லை. இருந்தாலும் கைப்பற்றப்பட்ட பணம் யார் உடையது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பணம் கைப்பற்றப்பட்ட இடம் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமானது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடியில் உள்ள வீடு, அவருக்கு சொந்தமான கல்லூரி மற்றும் உறவினரான காட்பாடு பள்ளிக்குப்பத்தை சேர்ந்த பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் தாமோதரன் ஆகியோருக்கு சொந்தமான 4 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. வேலூர் எம்பி கதிர்ஆனந்த் வீட்டில் யாரும் இல்லாததால் அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் சிறிது நேரம் காத்திருந்தனர். அதன் பிறகு கதிர்ஆனந்த் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கதிர்ஆனந்த் வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. சோதனையில்போது வீட்டின் முன்பு ஆதரவா ளர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வருடன் துரைமுருகன் சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தனது மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் மற்றும் சிலரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

The post பறக்கும்படை ₹11 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; வேலூர் எம்பி கதிர்ஆனந்த் வீடு உட்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: வழக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kathiranand ,Chennai ,2019 parliamentary elections ,Kadir Anand ,Dinakaran ,
× RELATED ஜோடியாக சுற்றிய பெண் ஏட்டு, காவலர்...