×

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யும் வரையில் போராட்டம்: மேலூர் ஆர்ப்பாட்டத்தில் வைகோ திட்டவட்டம்

மேலூர்: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ கூறினார்.

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் நாயக்கர்பட்டி, வல்லாளப்பட்டி மேலவளவு ஆகிய கிராமங்களில், ஒன்றிய அரசு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், மேலூர் பஸ் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு வரவேற்றார். மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலைகுமார், முன்னாள் எம்.பிக்கள் கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன், கட்சி துணை பொதுச் செயலாளர்கள் ரொகையா, ஆடுதுரை, மல்லை சத்யா, மாநில பொருளாளர் செந்தில் அதிபன், மாநில அவை தலைவர் அர்ஜூன் ராஜா முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது:
எனது உடல்நிலை காரணமாக, ஒரு வருடமாக எந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை என் வழக்கு மூலமாக மூடப்பட்டது. பெரியாறு அணை போராட்டம், தஞ்சாவூர் மீத்தேன் போராட்டம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் போன்ற போராட்டங்களில் நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்தப் பணிகளை நிறுத்துவதற்கு முயற்சி செய்தேன்.

அரிட்டாப்பட்டியில் குடைவரை கோயில்கள், சமண படுகை, பழமை வாய்ந்த தமிழ் எழுத்துக்கள், வற்றாத நீரூற்றுகள், புரதான சின்னங்கள் இருக்கும் நிலையில், இதனை பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தலமாக மாநில அரசு அறிவித்துள்ளது. எனவே, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யும் வரை, எங்களது போராட்டத் தொடரும். இவ்வாறு பேசினார்.

The post அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யும் வரையில் போராட்டம்: மேலூர் ஆர்ப்பாட்டத்தில் வைகோ திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Aritapatti ,Vaiko ,Melur ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு அறிவித்துள்ள டங்ஸ்டன்...