மதுரை: மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜவினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார சம்பவம் தொடர்பாக, பாஜ மகளிரணி சார்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி ெகாடுக்கவில்லை. இந்நிலையில், மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயில் பகுதியில் இருந்து பாஜ மகளிரணியினர் நேற்று காலை பேரணி செல்ல தயாராகினர். போலீசார் தரப்பில், ‘‘அனுமதி இல்லை என்பதால், பேரணி சென்றால் கைது செய்யப்படுவீர்கள்’’ என கூறினர்.
அப்போது மாநில மகளிரணி தலைவி உமாரதி தலைமையில் அங்கு கூடியிருந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகளிரணி தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், பேரணி செல்ல முயன்ற உமாரதி, நடிகை குஷ்பு, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி உட்பட 300 பெண்களை போலீசார் கைது செய்தனர். இவர்களை ஆட்டுச்சந்தை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர், மாலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தள்ளுமுள்ளுவில் சிக்கிய குஷ்பு
பேரணி செல்ல முயன்றபோது நடிகை குஷ்புவை பார்த்து கூட்டத்தினரும், அவ்வழியாக சென்ற பொதுமக்களும் சூழ்ந்து கொண்டனர். குஷ்புவை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றபோது, ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பலரும் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து துணை கமிஷனர் வனிதா தலைமையிலான போலீசார் குஷ்புவை பாதுகாப்பாக அழைத்து வேனில் ஏற்றி சென்றனர். குஷ்பு பேசத் தொடங்கியதும், கூட்டத்தினரை கைது செய்ய போலீசார் வாகனங்களை தயார் நிலைக்கு கொண்டு வந்தனர். இதைப் பார்த்ததும் பேரணிக்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் பலரும் கைதுக்கு பயந்து ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
‘கண்ணகி’ கண்ணீர்
பேரணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்கள் முதலில் தீச்சட்டி எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணகி போல வேடமிட்டிருந்த நெல்லை நாடகக் கலைஞர் உமாவை, போலீசார் கைது செய்து வேனில் ஏற்றியபோது அவர் பயந்து போய் கண்ணீர் விட்டு அழுதார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கிளம்பி வந்து விடலாம் எனக்கூறி அழைத்து வரப்பட்ட நிலையில், போலீசார் கைது செய்ததால் பயத்தில் உமா அழுததாக கூறப்படுகிறது.
The post அண்ணா பல்கலை. மாணவி பலாத்கார விவகாரம்; தடையை மீறி பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு கைது: மதுரையில் பரபரப்பு appeared first on Dinakaran.