×

சிறுத்தைகள் தாக்கியதால் இறந்ததா? கொட்டகையில் இருந்த 7 ஆடுகள் பலி ; கே.வி.குப்பம் அருகே மக்கள் அதிர்ச்சி

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இவற்றை சிறுத்தைகள் கடித்து கொன்றிருக்கலாம் என்று கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.வி.குப்பம் அடுத்த துருவம் பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச்சென்ற இளம்பெண்ணை சிறுத்தை கடித்து கொன்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் பகுதிகளில் ஆடுகளை கொன்றுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை ஒரு சிலர் பார்த்துள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் துருவம் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் சிறுத்தையின் கால் தடம் கிடைத்தபோது அதன் உருவம் சிசிடிவியில் பதிவாகவில்லை. சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கிராம மக்கள் உஷாராக இருக்கும்படி கலெக்டர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை கே.வி.குப்பம் அடுத்த பனமடங்கி அருகே கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த விவரம்: பனமடங்கி ஊராட்சி ராமாபுரம் பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள ஏரிப்பகுதியில் வசிப்பவர் ராஜமாணிக்கம், விவசாயி. இவர் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். இதற்கென தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்துள்ளார். அவற்றில் ஆடுகளை இரவில் அடைத்து வைப்பது வழக்கம். நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 10க்கும் மேற்பட்ட ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்தனர். இன்று அதிகாலை பார்த்தபோது கொட்டகையில் இருந்த 7 ஆடுகள் ஆங்காங்கே கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. குறிப்பாக அப்பகுதி முழுவதும் ஆங்காங்கே ஆடுகளின் உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

இதுகுறித்த தகவலறிந்த காளாம்பட்டு கால்நடை மருத்துவ குழுவினர் விரைந்து வந்து ஆடுகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொட்டகையில் புகுந்த ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள், ஆடுகளை கடித்து குதறியிருக்கலாம் என கிராம மக்கள் கருதுகின்றனர். இதனால் அவர்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். எனவே சிறுத்தை நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறுத்தை வேட்டை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சிறுத்தைகள் தாக்கியதால் இறந்ததா? கொட்டகையில் இருந்த 7 ஆடுகள் பலி ; கே.வி.குப்பம் அருகே மக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : K.V.Kuppam. ,K.V.Kuppam ,Gudiyatham ,Peranampattu ,Vellore district… ,
× RELATED காவல் நிலையத்தில் கழுத்தறுத்து கொண்ட...