- திட்டம்
- தூத்துக்குடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பெண்கள் திட்டம்
- இந்தியா
- தமிழ்நாடு…
தூத்துக்குடி: இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாட்டு பெண்கள் ‘டாப்’ இடத்தில் உள்ளனர் என்று தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் கடந்த 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் 75,028 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்க துவக்க விழா, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டம் எனும் மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைக்கும் இந்த அரங்கிலும், காணொலி காட்சியில் இணைந்துள்ள 657 கல்லூரிகளைச் சார்ந்த மாணவிகளையும் பார்க்கும்போது, ஒரு ‘திராவிடியன் ஸ்டாக்காக’ நான் பெருமைப்படுகிறேன்.
இதற்கு நேர் எதிராக இன்னொரு ஸ்டாக் இருக்கிறது. நம்மை சாதி, மதம் என்று சொல்லி, பிரிக்க நினைக்கும் ஸ்டாக். . பெண்கள் என்றால் வீட்டில் தான் இருக்க வேண்டும். கடைசி வரை ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என்று மனுவாத சிந்தனையை இந்தக் காலத்திலும் பேசிக் கொண்டு திரியும் காலாவதியான ஸ்டாக் இது. அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்து, தமிழ்நாட்டு பெண்கள் இன்று இந்தியாவிலேயே டாப்-ஆக இருக்கிறீர்கள். மதிப்பெண் பெறுவதில் தமிழ்நாட்டுப் பெண்கள் ‘டாப்’.
நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகமாக சேருவதிலும், நீங்கள்தான் டாப். உயர்கல்வியை முடித்து வேலைக்கு செல்வதிலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டுப் பெண்கள்தான் டாப்.மூடப்பட்டிருந்த கல்விக் கதவுகள் திறக்கப்பட்டு, நாம் எல்லாம் கல்விச் சாலைகளுக்கு வரத் தொடங்கிய போது, பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? காமராஜர் கல்விக் கண்ணைத் திறந்தார். கலைஞர் ஆட்சி, எழுந்து நடக்க வைக்க வேண்டும்” என்று சொன்னார். விடுதலை பெற்ற 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டுகளில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகள் 68 தான். ஆனால், கலைஞர் முதல்வராக இருந்த 1969 முதல் 1975 வரை மட்டும் 97 அரசு கல்லூரிகளை திறந்தார். புதுமுக கல்லூரி வகுப்பு வரை இலவசக் கல்வி என்று கலைஞர் அறிவித்த பிறகு தான் பல்லாயிரக்கணக்கானோர் பள்ளிகளை நோக்கி வந்தார்கள். கலைஞர் தான், மருத்துவம், சட்டம், தமிழ் இணையம், கால்நடை ஆகியவற்றிற்கு தனித்தனி பல்கலைக் கழகங்களை உருவாக்கினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், சேலம் பெரியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். ஏராளமான மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி, தலைசிறந்த மருத்துவக் கட்டமைப்புக்கு வித்திட்டார். அதனால்தான் இந்தியாவிலேயே மருத்துவர்கள் விகிதத்தில் தமிழ்நாடு நம்பர் – 1 ஆக இருக்கிறது. இந்த வரிசையில், கல்லூரிக் கல்விக்கும், உயர்கல்விக்கும், ஆராய்ச்சிக் கல்விக்கும் நமது திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பெண்களுக்கு நேரடியாக பணத்தை கொண்டு சேர்த்து, அவர்களுக்கான பொருளாதார விடுதலையையும், சமூக விடுதலையையும் உறுதி செய்கிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். கனிமொழி எம்பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலெக்டர் இளம்பகவத், எம்எல்ஏக்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமூகநலத்துறை செயலாளர் ஜெய முரளிதரன் நன்றி கூறினார்.
“மாணவிகள் படிப்புக்கு எந்த தடை வந்தாலும் உடைப்பேன்”
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புதுமைப் பெண் திட்டம் தொடங்கிய காலத்திலிருந்து, தற்போது வரை கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உட்பட சுமார் 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
பணமில்லாமல் படிப்பை நிறுத்திய பல ஆயிரம் மாணவிகள், கல்லூரிகளை நோக்கி வரத் தொடங்கி இருக்கின்றனர். உங்களுடைய படிப்புக்குப் பணம் மட்டுமல்ல, எந்தத் தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன். மாணவர்களுக்காக, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கினோம். எந்த அப்பாவும், தன்னுடைய பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு கணக்கு பார்க்க மாட்டார்கள். அப்படித்தான் உயர் கல்விக்கான, திட்டங்கள் என்றால், எந்த நெருக்கடி இருந்தாலும் அதை நிறைவேற்றியே தீருவேன். அடுத்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும்தானா? அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடையாதா? என்று ஒரு கோரிக்கை வைத்தனர். அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ.ஆயிரம் வழங்கும் வகையில் இன்று புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறோம். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு முழுவதும் சுமார் 75 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்குகிறோம்.
உயர்கல்வி பெறாத பெண்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்காமல் நான் ஓயமாட்டேன். இது போட்டிகள் நிறைந்த உலகம். அதனால், பட்டங்களைக் கடந்த தனித்திறமைகள் அவசியம். திருமணத்துக்குப் பிறகும், வீட்டில் முடங்கிடாமல் வேலைகளுக்குச் சென்று பணியாற்றுங்கள். உங்கள் கல்வி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மட்டும் பயன்தரக்கூடியதாக இருக்கக் கூடாது. சமூகம் உங்களால் பயனடைகின்ற அளவுக்கு நீங்கள் உயரங்களை அடைய வேண்டும். புதுமைப் பெண்களாம் என் மகள்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு, தமிழர் திருநாள், பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மாணவிக்கு கைகுலுக்கி வாழ்த்து
விழாவில் மாணவி ஹர்சிகா, புதுமைப் பெண் திட்டத்தை சிறப்புகளை பாராட்டி பேசினார். தனது சரளமான மேடை பேச்சில் உயர் கல்விக்கு செல்லும் பெண்களின் வறுமை நிலை, அதை போக்கும் தமிழ்நாடு அரசின் திட்டங்களை சுட்டிக் காட்டிய அந்த மாணவி, அரசின் இலவச பஸ் பயண திட்டத்தையும், தனது உயர் கல்விக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை குறிப்பிட்டு பேசி, அரங்கில் அமர்ந்திருந்த அனைவரின் கை தட்டலையும் பெற்றார். அவர் பேசி முடித்தவுடன் மாணவி ஹர்சிகாவை அழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி வாழ்த்தினார்.
ரோட்டில் நடந்து சென்று மக்களுடன் சந்திப்பு
தூத்துக்குடி அரசு விழாவை முடித்துக் கொண்டு கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் நாங்குநேரியில் முதல்வர் ஸ்டாலினுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. முதல்வரை வரவேற்க ரோட்டின் இரு புறங்களிலும் பெண்கள் கூட்டம் திரண்டு நின்றதைப் பார்த்த ஸ்டாலின், காரை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரின் கைகளை குலுக்கி பெண்கள் வாழ்த்து தெரிவித்தனர். ரோட்டோரம் நின்ற சிறுமியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்துக் கொண்டார்.
The post தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் துவக்க விழா; உயர் கல்வியில் தமிழ்நாட்டு பெண்கள் தான் ‘டாப்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.