திருவாரூர்: டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறிய எடப்பாடி சட்டம், ஒழுங்கு பிரச்னை பற்றி பேசலாமா? என்று முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார். திருவாரூரில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடந்தாலும். அந்த சம்பவங்களுக்கு உடனடியாக முதலமைச்சர் மற்றும் காவல் துறை மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களை போன்று தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக தற்போதைய முதலமைச்சர் கூறவில்லை. எனவே தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறி வருவது ஏற்புடையதல்ல. அதேபோல் அன்புமணியும் கூறி வரும் நிலையில் அவரிடம் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு சான்றிதழ் பெற வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது குலக்கல்வியை கொண்டு வந்தது போல் தற்போதைய பிரதமர் மோடியும் விஸ்வகர்மா என்ற திட்டத்தின் கீழ் குலக்கல்வியை மீண்டும் மறைமுகமாக திணிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்.
ஜிஎஸ்டி மூலம் சாதாரண மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ அரிசிக்கு வரி உண்டு. ஆனால் மொத்தமாக பாக்கெட்டில் வாங்கும் அரிசிக்கு வரி இல்லை. இதேபோல் அலுமினிய பாத்திரங்கள் உட்பட அனைத்திற்கும் வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதானி போன்றவர்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கி வாரா கடன் என்ற பெயரில் தள்ளுபடியும், வரியும் குறைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறிய எடப்பாடி சட்டம், ஒழுங்கு பிரச்னை பற்றி பேசலாமா? முத்தரசன் குட்டு appeared first on Dinakaran.