*வாகன ஓட்டிகளிடம் பரபரப்பு
குன்னூர் : குன்னூர் மலைப்பாதையில் மின்கம்பம் சாலையோரம் இருந்த மலை ரயில் தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்ததால் வாகன ஓட்டிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கூடலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் குன்னூர் வந்துதான் செல்ல வேண்டும்.
இதனிடையே குன்னூர் பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் ஒன்று அருகே மலை ரயில் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தது. எதிர்பாராமல் விழுந்த மின் கம்பத்தால், மின் கம்பிகள் அறுந்து தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தன. இந்த சம்பவத்தால், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் பயணித்த 2 பேர் நொடிப்பொழுதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
இதனை அறிந்த குன்னூர் மின்வாரிய துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மின் கம்பத்தை சீரமைத்தனர். இருப்பினும் இதனால் சுமார் அரை மணி நேரம், நீண்ட தூரமாக சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றது. அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
The post குன்னூர் மலைப்பாதையில் மலை ரயில் தண்டவாளத்தில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தது appeared first on Dinakaran.