கோவை: கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டார். அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 6 முறை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக்கொண்டு உடலை வருத்தி கொண்டார். வெற்றிவேல் வீரவேல் என சுற்றி இருந்தவர்கள் கோஷமிட்டனர். சில அடிகளுக்குப் பிறகு அருகில் இருந்த தொண்டர்கள் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினர்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் நான் காலணிகள் அணிய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாளை முதல் 48 நாட்களுக்கு நான் விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து கொண்டு அண்ணாமலை நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேல் சட்டை அணியாமல், பச்சை வேஷ்டி அணிந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை அண்ணாமலை நடத்தியுள்ளார். அண்ணாமலை சாட்டையால் அடிக்கும்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்… வீரவேல் என முழக்கமிட்டனர். பின்னர், சில அடிகளுக்குப் பிறகு அருகில் இருந்த தொண்டர்கள் அண்ணாமலையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
The post கோவையில் தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!! appeared first on Dinakaran.