×

போலீசார் எச்சரித்தும் கேட்காமல் ரோட் ஷோ நடத்தினார் அல்லு அர்ஜூனால் தான் தியேட்டரில் பெண் பலி: தெலங்கானா சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபரப்பு பேச்சு

திருமலை: தெலங்கானாவில் சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எம்ஐஎம் கட்சி எம்.எல்.ஏ அக்பருதீன், புஷ்பா-2 படம் பார்க்க வந்து தாய் இறந்து, மகன் கோமாவில் உள்ள சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: புஷ்பா- 2 படம் பார்க்க படத்தின் ஹீரோ, ஹீரோயின் படக் குழுவினர் வருவதாக போலீசாருக்கு முன்கூட்டியே பாதுகாப்பு கேட்டு தியேட்டர் நிர்வாகத்தினர் கடிதம் வழங்கினர். ஆனால் திரை யரங்கிற்குள் ஒரே ஒரு வழி உள்ளதால், பிரபலங்கள் வந்தால் பிரச்னை ஏற்படும் என போலீசார் அனுமதி வழங்கவில்லை.

ஆனாலும் பட ஹீரோ அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு சென்றார். நேரடியாக தியேட்டருக்கு போய் படம் பார்த்துவிட்டு சென்றிருந்தால் பிரச்னை வந்திருக்காது. தியேட்டருக்கு செல்லும் வழியில் காரின் ரூப் டாப் திறந்து ரோட் ஷோ செய்து கொண்டிருந்தனர். இதனால் அனைத்து தியேட்டர்களில் இருந்த பொதுமக்கள், ஒரே நேரத்தில் சந்தியா தியேட்டரை நோக்கி வந்தபோது, ​​திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அல்லு அர்ஜூன் தியேட்டருக்குள் சென்றபிறகு கூட்ட நெரிசலை போலீசார் கலைத்து பார்த்தபோது ஒரு தாயும், மகனும் கைகளை பிடித்தபடி எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தனர்.

உடனடியாக போலீசார் முதலுதவி சிபிஆர் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் ரேவதி உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் தற்பொழுதும் கோமாவில் உள்ளார். இருப்பினும் அல்லு அர்ஜூன் தியேட்டருக்குள் படம் பார்த்துக்கொண்டே இருந்ததால் வெளியே ரசிகர்கள் அப்படியே சூழ்ந்திருந்தனர். தியேட்டருக்குள்ளும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நள்ளிரவு 12 மணிக்கு வலுக்கட்டாயமாக அல்லு அர்ஜூனை தியேட்டரில் இருந்து வீட்டிற்கு செல்லும்படி வெளியேற்றினர். திரும்பி செல்லும் போது கூட, கார் ரூப் டாப்பில் இருந்து ரோட் ஷோ செய்து கொண்டு சென்றார்.

மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கும் நடுத்தர குடும்பத்தினர் தனது மகன் அந்த ஹீரோவின் ரசிகன் என்பதால் ஒருவருக்கு ரூ.3000 டிக்கெட் என 4 பேருக்கு ரூ.12 ஆயிரம் செலவு செய்து படம் பார்க்க வந்துள்ளனர். தாய் இறந்து மகன் உயிருக்கு போராடி வருகிறான். ஒரு குடும்பமே சிதைந்துவிட்டது. அல்லு அர்ஜூன் கால்களை இழந்தரா, கண்களை இழந்தாரா அல்லது கிட்னியைத்தான் இழந்தாரா? அவரது இல்லத்துக்கு பிரபலங்கள் விரைந்து சென்று பார்க்க வேண்டிய அவசியம் என்ன?. தியேட்டர் நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சினிமா பிரபலங்கள் யாராவது அக்கறை காட்டினீர்களா?

அவர்கள் குடும்பத்தை பார்க்க கூட அல்லுஅர்ஜூனோ அல்லது அவரது படக்குழுவோ, திரைப்படத் துறையினர் ஒருவர் கூட செல்லவில்லை. ஆனால் அல்லு அர்ஜூன் ஜாமீனில் வெளியே வந்தால் வரிசைக்கட்டி கொண்டு அவரை பார்க்க சென்றனர். அரசையும் போலீசாரையும் சில அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். அல்லு அர்ஜூனால்தான் சந்தியா தியேட்டர் சம்பவம் நடந்தது. அவர் வரவில்லை என்றால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது, ரேவதியின் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்காது. இதற்கு காரணமானவர்கள் யாரையும் தப்பவிடமாட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் படங்களுக்கு பிரிமீயம் ேஷா வெளியிட அனுமதி தர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post போலீசார் எச்சரித்தும் கேட்காமல் ரோட் ஷோ நடத்தினார் அல்லு அர்ஜூனால் தான் தியேட்டரில் பெண் பலி: தெலங்கானா சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Allu Arjun ,Chief Minister ,Revanth Reddy ,Telangana Assembly ,Tirumalai ,MIM ,MLA ,Akbaruddin ,Revanth Reddy… ,
× RELATED ரசிகர்களை கட்டுபடுத்தி வைக்க...