×

மணிப்பூரில் நடந்த திடீர் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்பி படுகாயம்

இம்பால்: மணிப்பூரில் குக்கி மக்களின் போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்பி மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட போலீசார் படுகாயம் அடைந்தது தெரிய வந்துள்ளது. மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்து அங்கு வசிக்கும் மெய்பீஸ், குக்கி இன மக்கள் இடையே இனக்கலவரம் நிகழ்ந்து வருகிறது. காங்போக்பி மாவட்டத்தில் சைபோல் கிராமத்தில் கடந்த 31ம் தேதி குக்கி-சோ பழங்குடியினத்தை சேர்ந்த பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்துள்ளனர்.

இந்த தடியடியின்போது பெண்கள் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகின்றது. இதனை கண்டித்து குக்கி சோ சமூகத்தை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள், சிஆர்பிஎப் மற்றும் போலீசாரை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை ஏற்று பாதுகாப்பு படை வீரர்களை திரும்ப பெறாததை கண்டித்து நேற்று முன்தினம் மாலை காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை மர்ம கும்பல் ஒன்று தாக்கி சேதப்படுத்தி இருக்கிறது.

இந்த தாக்குதலை குக்கி இன கிளர்ச்சியாளர்கள் அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. மத்திய பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், கல்வீச்சிலும் இறங்கினர். மாவட்ட எஸ்பி அலுவலகம் மீது அவர்கள் கற்களை வீசி தாக்கியதில் அங்கு பணியில் இருந்த பலர் காயம் அடைந்தனர். உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் கடும் சேதம் அடைந்தன. இந்த திடீர் தாக்குதலில் காங்போக்பி மாவட்ட எஸ்பியும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான மனோஜ் பிரபாகர் காயம் அடைந்தார். அவருடன் பணியில் இருந்த மற்ற காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த எஸ்பி மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட போலீசார், அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்போக்பி மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காங்போக்பியில் நடந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில், அதிநவீன ஆயுதங்களை ஏந்திய நபர்கள், முகங்களை மூடியபடி உடைகளை அணிந்து தெருக்களில் செல்கின்றனர். எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள வாகனங்கள் சேதப்படுத்தப்படுகிறது. அதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் பிரபாகர் காயமடைந்து தலையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட காவலர்களை வழிநடத்தி செல்லும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

* மோடி தப்ப முடியாது: கார்கே விமர்சனம்
மணிப்பூர் மாநிலத்தை எப்போதும் பதற்றத்தில் வைத்திருப்பதிலேயே பாஜ ஆர்வமாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘எல்லை மாநிலத்தை பதற்றத்தில் வைத்திருப்பதில் பாஜ சில சுயநலங்களை கொண்டுள்ளது. மணிப்பூரை எரித்த தீக்குச்சி பாஜ. நரேந்திர மோடி ஜி, 2022ம் ஆண்டு பாஜவிற்கு வாக்கு சேகரிப்பதற்காக நீங்கள் மணிப்பூர் சென்றீர்கள். 2023ம் ஆண்டு மே 3ம் தேதி வன்முறை வெடித்தது. சுமார் 600 நாட்களுக்கு மேலாகிவிட்டது. மேலும் மாநிலத்தில் கிராமங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதை செயற்கைகோள் புகைப்படங்கள் மூலமாக ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

சமீபத்தில் எஸ்பி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உங்களது திறமையற்ற மற்றும் வெட்கமற்ற முதல்வர் வருத்தம் தெரிவித்தார். 250க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிரிழப்பு மற்றும் 60ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அழகிய எல்லை மாநிலத்தை கொதிநிலையில் வைத்திருப்பதற்கு பாஜ சில சுயநலங்களை கொண்டுள்ளது என்பதை நாங்கள் மிகுந்த பொறுப்புடன் மீண்டும் கூறுகிறோம். 20 மாதங்களாக மக்கள் இன்னும் முகாம்களில் இருக்கிறார்கள். ராஜதர்மத்தை பின்பற்றாத அரசியலமைப்பு குற்றத்தில் இருந்து நீங்கள் தப்பமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

* புதிய ஆளுநர் அவசர ஆலோசனை
மணிப்பூர் மாநில புதிய ஆளுநராக பொறுப்பேற்ற அஜய் குமார் பல்லா தலைமையில் ராஜ்பவனில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தற்போதைய சட்டம், ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு குறிப்பாக எல்லைப்பகுதிகளில் பாதுகாப்புக்கு கவனம் செலுத்தும்படியும், மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் டிஜிபிக்கு ஆளுநர் உத்தரவிட்டார். மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் ராணுவம் மற்றும் துணை ராணுவ படை அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.

The post மணிப்பூரில் நடந்த திடீர் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்பி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : SP ,Tamil Nadu ,Manipur ,Imphal ,Manoj Prabhakar ,Meibiz ,Kuki ,Manipur… ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த வன்முறை...