புதுடெல்லி: அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடந்தது. மாநிலங்களவையில் விவாதத்தின்போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சட்ட மாமேதை அம்பேத்கர் குறித்த பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதன் காரணமாக அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அமைச்சர் அமித் ஷா தான் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும், அரசியலை விட்டு விலகவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலுத்தன. நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மற்றும் பாஜ எம்பிக்கள் போட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பாஜ எம்பிக்கள் காயமடைந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நேற்று மக்களவை தொடங்கியது. எதிர்க்கட்சி எம்பிக்கள் அம்பேத்கரை புகழ்ந்தும், அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.
அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா, எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தின் எந்த வாயில் அல்லது வளாகத்தில் எங்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து அவர் கேள்வி நேரத்துக்கு பதிலாக சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம் அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா 2024, யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் திருத்த மசோதா 2024 ஆகியவற்றை நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைப்பதற்கான தீர்மானத்தை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார். கூச்சல், குழப்பங்களுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாகஎதிர்க்கட்சி எம்பிக்கள் விஜய்சவுக்கில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். அமைச்சர் அமித் ஷா மன்னிப்புக்கேட்க வேண்டும் மற்றும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
மாநிலங்களவை நேற்று தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் விவகாரத்தை எழுப்பின. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை தொடங்கியவுடன் ஒரே நேரத்தில் தேர்தல்களை முன்மொழியும் இரண்டு மசோதாக்களை ஆராய்வதற்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மாநிலங்களவை எம்பிக்களை நியமனம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைக்குமாறு அவை தலைவர் கேட்டுக்கொண்டார்.
சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் 12 உறுப்பினர்களின் பெயரை குறிப்பிட்டு தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து அவை தலைவர் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார். இதன் மூலம் கடந்த நவம்பர் 25ம் தேதி துவங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்துள்ளது.
* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25ம் தேதி துவங்கியது.
* தொடர் அமளியில் பல நாட்கள் நாடாளுமன்ற அலுவல் பாதிக்கப்பட்டது.
* நேற்றுடன் கூட்டத் தொடர் முடிந்தது.
The post அமித் ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்தது appeared first on Dinakaran.