புதுடெல்லி: வஜ்ரா கே- ரக பீரங்கிகள் வாங்குவதற்காக எல் அண்ட் டி நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரூ.7628கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் கே-9 வஜ்ரா ரக பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேலும் 100 வஜ்ரா பீரங்கிகளை கொள்முதல் செய்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக எல் அண்ட் டி நிறுவனத்துடன் ரூ.7628 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் பாதுகாப்பு துறை அமைச்சகம் நேற்று கையெழுத்திட்டது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்ட பீரங்கி, அதிக துல்லியத்துடன் நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டதாகும்.
பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘‘எல் அண்ட் டி நிறுவனத்திடம் கே-9 வஜ்ரா டி பீரங்கிகளை இந்திய ராணுவத்திற்காக வாங்குவதற்காக மொத்தம் ரூ.7628கோடிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. வஜ்ரா பீரங்கிகள் கொள்முதல் இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு ஊக்கமளிக்கும், செயல்பாட்டு தயார்நிலையை மேம்படுத்தும். உயரமான பகுதிகளில் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையிலும் வஜ்ரா கே-பீரங்கிகள் முழு திறனுடன் செயல்படக்கூடியதாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ரூ.7628 கோடிக்கு வஜ்ரா பீரங்கிகள்: எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் appeared first on Dinakaran.