ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் எல்பிஜி டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக வாகனங்களின் மீது மோதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் 35 பேர் காயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எல்பிஜி ஏற்றி வந்த டேங்கர் லாரி வாகனங்களின்மீது மோதியது. இதில் எல்பிஜி ஏற்றி வந்த லாரி சேதமடைந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டது. இது தீ விபத்துக்கு வழிவகுத்தது. டேங்கரின் பின்னால் அடுத்தடுத்து நின்றிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
எதிர் திசையில் இருந்து வந்த வாகனங்களிலும் தீப்பற்றியது. எரிவாயு கசிவால் தீ மளமளவென பரவியதால் அருகில் இருந்த வாகனங்களில் இருந்தவர்கள் உள்ளே வரமுடியாமல் தீயில் சிக்கினார்கள். ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நடந்த இந்த தீ விபத்தினால் 37 வாகனங்கள் தீயில் சிக்கின. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயைக்கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருந்தது.
தீயணைப்பு துறை வீரர்களால் தீப்பற்றி எரியும் வாகனங்களை நெருங்க முடியவில்லை. பல மணி நேரம் கடுமையாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து நடந்த இடத்துக்கு 25 ஆம்புலன்ஸ்கள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்து நடந்த இடத்திற்கு மிக அருகாமையில் 3 பெட்ரோல் பங்க்குகள் இருந்தன.
அதிர்ஷ்டவசமாக அவை பாதிக்கப்படவில்லை. இதனிடையே தீ விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் பஜன் லால் சர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.மேலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரமும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
The post ராஜஸ்தானில் பயங்கரம் விபத்தில் சிக்கிய எல்பிஜி டேங்கர் லாரி தீப்பிடித்ததில் 11 பேர் கருகி பலி: 37 வாகனங்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.