×

தாமிரபரணி வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் தாம்போதி பாலம் தற்காலிகமாக சீரமைப்பு: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ நடவடிக்கை


ஏரல்: தாமிரபரணியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் ஏரல் தாம்போதி பாலத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ நடவடிக்கையால் உடனடியாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஏரல் தாம்போதி ஆற்றுப் பாலம் வழியாக பல ஆண்டுகளாக போக்குவரத்து நடந்தது. ஏரலுக்கு தென்புறம் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொழில், வணிகம், வேலைக்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் பாலம் மூழ்கி போக்குவரத்து முடங்குவது வழக்கமாகி வந்தது. இதையடுத்து ஏரல் மற்றும் சுற்றுவட்டார மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தாம்போதி பாலம் அருகே புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, போக்குவரத்து நடைபெற்றது. தாம்போதி பாலத்தையும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஆண்டுதோறும் ஏற்பட்ட வெள்ளத்தில் தாம்போதி பாலத்தின் நடுவில் உடைந்து சேதம் ஏற்பட்டது. உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு விட்ட நிலையில், பழைய தாம்போதி பாலத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடைபட்டது. இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஏரல் உயர்மட்ட பாலத்தில் வடபகுதி இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள தரைமட்ட தாம்போதி பாலத்தின் நடுவே ஏற்பட்ட உடைப்பை அரசு தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்துக்கு திறந்து விட்டது. உயர்மட்ட பாலம் சேதமடைந்து ஓராண்டாகியும் வடபகுதி இணைப்புச் சாலை சீரமைக்கப்படவில்லை. இந்த இணைப்புச் சாலையில் கூடுதல் தூண்கள் அமைத்து பாலத்தை நீட்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே கடந்த 13ம் தேதி தாமிரபரணியில் கரைபுரண்ட வெள்ளத்தில் ஏரல் தாம்போதி பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அவ்வழியாக நடந்து வந்த போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை (15ம் தேதி) பாலத்தை மூழ்கடித்தப்படி சென்ற தண்ணீர், இரவில் குறைந்து பாலத்தின் கீழாக செல்கிறது. இதனால் நேற்று முதல் பழைய பாலத்தில் போக்குவரத்து தொடங்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை பாலத்தின் நடுவில் ஏற்கனவே உடைந்த இடத்தில் மீண்டும் உடைந்தது தெரிய வந்தது. இதனால் தண்ணீர் வற்றியும் மீண்டும் போக்குவரத்தை பழைய பாலத்தில் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

இதையறிந்த வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், நெடுஞ்சாலை துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பழைய தாம்போதி பாலம் உடைப்பை சீரமைத்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், உதவி கோட்ட பொறியாளர் சின்னச்சாமி, உதவி பொறியாளர் பரமசிவம் மற்றும் அதிகாரிகள் முன்னின்று பாலத்தின் உடைப்பினை தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகளை செய்தனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தில் குழாய்களில் தண்ணீர் வருவதை அடைத்தும், பாலத்தின் மேல் வெளியே தெரிகிற குழாய்கள் மேல் லாரிகளில் ஜல்லி கற்கள் கலந்த மணல்களை கொண்டு வந்து கொட்டி, ஜேசிபி மற்றும் ரோடு ரோலர் மூலம் சீரமைத்தனர்.

மாலையில் வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், ஏரல் ஆற்றுப்பாலம் உடைப்பு ஏற்பட்ட இடம், சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு போக்குவரத்தை துவக்கி வைத்தார். இதனால் ஏரல் பகுதி மக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியின் போது திருச்செந்தூர் ஆர்டிஓ சுகுமாரன், தாசில்தார் செல்வகுமார், ஏரல் பேருராட்சி தலைவர் சர்மிளாதேவி, செயல் அலுவலர் சுப்பிரமணியன், ஏரல் பேரூர் திமுக செயலாளர் ராயப்பன், ஏரல் வியாபாரிகள் சங்க செயலாளர்கள் மணிவண்ணன், ரவிசங்கர், ஒன்றிய இளைஞரணி ராஜவேல், பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார், தெற்கு மாவட்ட காங். பொருளாளர் எடிசன், வட்டார தலைவர்கள் தாசன், ஜெயராஜ், நல்லகண்ணு, மாவட்ட பொதுச் செயலாளர் சீனிராஜேந்திரன், வட்டார பொருளாளர் அய்யம்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

3 மாதத்தில் உயர்மட்ட பாலம் சீரமைப்பு
ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கூறியதாவது:
ஏரல் தாம்போதி பாலம் உடைப்பு ஏற்பட்டதை சீரமைத்து அதில் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் உயர்மட்ட பாலம் வேலைகளை 3 மாதத்தில் முடித்து அதிலும் போக்குவரத்து தொடங்கப்படும், என்றார்.

The post தாமிரபரணி வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் தாம்போதி பாலம் தற்காலிகமாக சீரமைப்பு: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Airal Tambodhi bridge ,Thamirabarani ,Urvashi Amritraj ,MLA ,Airal Tambodhi ,Dinakaran ,
× RELATED பழையகாயலில் வெள்ளமீட்பு குழுவை சந்தித்த ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ