×

பூந்தமல்லி நீதிமன்றத்தில் பணம் கையாடல் செய்த 2 பேருக்கு தண்டனை உறுதி: மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி

பூந்தமல்லி: மின்வாரியத்தில் ₹28.51 லட்சம் பணத்தை கையாடல் செய்த 2 ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை, கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றிரவு பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும், அவர்களின் 24 மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சென்னை வளசரவாக்கம் அலுவலகத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மின் கணக்கீட்டு ஆய்வாளராக கணபதி (48), மின் கணக்கீட்டு ஆய்வாளராக சிவப்பிரகாசம் (48), வருவாய் மேற்பார்வையாளராக சாகுல் ஹமீது (51) ஆகிய 3 பேரும் வேலைபார்த்து வந்துள்ளனர். இந்த 3 பேரும் கடந்த 2003ம் ஆண்டு மின் நுகர்வேரிடமிருந்து தமிழ்நாடு மின்வாரியத்துக்கு பெறப்பட்ட 28 லட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாயை கையாடல் செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நம்பிக்கை மோசடி, ஆவண தடுப்பு பிரிவில் உதவி செயற்பொறியாளர் நடராஜன் புகார் அளித்துள்ளார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணமோசடியில் ஈடுபட்ட சிவப்பிரகாசம், சாகுல் ஹமீது, கணபதி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை கடந்த 20 ஆண்டுகளாக பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு கணபதிக்கு ஓராண்டு சிறை, ₹12 ஆயிரம் அபராதமும், சாகுல் ஹமீதுக்கு ஓராண்டு சிறை, ₹6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணை காலத்தில் சிவப்பிரகாசம் இறந்துவிட்டார்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, பூந்தமல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2ல் இதுவரை 24 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று இந்த மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணை முடிந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.பி.புரட்சிதாசன் ஆஜராகி வாதாடினார். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு 24 மேல்முறையீட்டு மனுக்களையும் நீதிபதி சி.விஜயகுமார் தள்ளுபடி செய்தார்.

மேலும், மின்வாரியத்தில் ₹28.51 லட்சம் பணமோசடியில் ஈடுபட்ட கணபதி, சாகுல் ஹமீது ஆகிய 2 பேருக்கும் 20 ஆண்டுகளுக்கு பிறகு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனை தீர்ப்பை உறுதி செய்து, அவர்களை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி சி.விஜயகுமார் உத்தரவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post பூந்தமல்லி நீதிமன்றத்தில் பணம் கையாடல் செய்த 2 பேருக்கு தண்டனை உறுதி: மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Poontamalli ,Poonamalli ,Tamil Nadu ,Punthamalli Court ,Dinakaran ,
× RELATED ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய...