நெல்லை: தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியால் கேரள மருத்துவக் கழிவுகள் முழுமையாக எடுத்துச் செல்லப்படுகின்றன என்று நெல்லை ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். 6 இடங்களில் அடையாளம் காணப்பட்டு மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் எங்கெல்லாம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றி, கேரளத்திற்கு எடுத்துச் செல்லும் பணி இன்று (டிச.22) காலை முதல் தொடங்கியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் சட்டத்திற்குப் புறம்பாக, திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், நடுக்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் கொட்டப்பட்டன. இது தொடர்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசு அகற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் பார்வையிட்ட கேரள அதிகாரிகள் குழு, மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த மனோகர், மாயாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கழிவுகளை கேரளத்திலிருந்து கொண்டுவர உபயோகப்படுத்தப்பட்ட லாரி உரிமையாளரும், கேரளத்தைச் சேர்ந்த தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் மேற்பார்வையாளரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை கேரளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் சம்பவ இடத்திற்கு திருவனந்தபுரத்தில் இருந்து 8 லாரிகள் இன்று காலை வருகை தந்தன. அதன்பிறகு தமிழக, கேரள அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபிகளை உபயோகித்து மருத்துவக் கழிவுகளை லாரிகளில் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியால் கேரள மருத்துவக் கழிவுகள் முழுமையாக எடுத்துச் செல்லப்படுகின்றன என்று நெல்லை ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். எங்கெல்லாம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மருத்துவக் கழிவுகள் அகற்றம்: நெல்லை ஆட்சியர் விளக்கம் appeared first on Dinakaran.