ஆறுமுகநேரி: ஆத்தூர், மேலாத்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால் 80க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதையடுத்து 300க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள வெள்ள நீரை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த 12ம் தேதி முதல் 3 நாட்கள் மழை பெய்தது.
இதன் காரணமாக மேலாத்தூர் பகுதியில் உள்ள குச்சிக்காடு ஜெஜெ நகரில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இப்பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் மேலாத்தூர் பகுதியில் தனியார் மண்டபத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாமில் உள்ளவர்களுக்கு டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் செயல் உதவித் தலைவர் (பணியகம்) சீனிவாசன் ஏற்பாட்டில் மேலாத்தூர் பஞ். தலைவர் சதீஷ்குமார் மக்களுக்கு உணவு வழங்கினார். மேலும் வெள்ள நீர் புகுந்துள்ள பகுதிகளில் கால்நடைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆத்தூர் பகுதியில் உள்ள ஆத்தங்கரை தைக்கா காலனியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளில் புகுந்த தண்ணீரை பகுதி மக்கள் வாலியை கொண்டு இறைத்து வெளியே ஊற்றினர். இப்பகுதியில் வீடுகள் மற்றும் தெருவில் உள்ள வெள்ள நீரை ஆத்தூர் பேரூராட்சித் தலைவர் கமால்தீன் தலைமையில் மின் மோட்டார்கள் கொண்டு வெளியேற்றும் பணி நடந்தது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) பாபு, மேலாத்தூர் பஞ்.துணைத் தலைவர் பக்கீர்முகைதீன் உள்பட அலுவலர்கள், கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
The post கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் ஆத்தூர், மேலாத்தூரில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது: 300 பேர் நிவாரண முகாமில் தங்க வைப்பு appeared first on Dinakaran.